தென்னிந்திய திரை உலகின் ஈடு இணையற்ற நட்சத்திர நடிகராக திகழும் தளபதி விஜய் அவர்கள் தனது ரசிகர்கள் படையை வெறும் ரசிகர்கள் மன்றமாக மட்டும் விடாமல் மக்கள் நல பணிகளும் ஈடுபடுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பலர் போட்டியிட்டனர் அவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது ஊரக உள்ளாட்சியில் மக்கள் பணியாற்றி வருகின்றனர். இது போல் ரத்த தானத்தை முன்னிறுத்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் மக்கள் இயக்கத்தினர் தொடங்கிய தளபதி விஜய் குருதியகம் எனும் செயலியும் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றது. மேலும் இந்த செயலியில் பல்லாயிரக்கணக்கானோர் இணைந்ததோடு தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் ரத்த தேவைகளையும் பூர்த்தி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன் விலையில்லா விருந்தகம் என்ற பெயரில் விஜய் மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்கள் பலரும் தாமாக முன்வந்து தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் ஏழை எளியவர்களுக்கு உணவளித்து வந்தனர். தளபதி விஜயின் கவனத்தை இந்த செயல் வெகுவாக ஈர்த்தது. எனவே உடனடியாக அந்த நிர்வாகிகளையும் உறுப்பினர்களையும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்த தளபதி விஜய், இந்த விலையில்லா விருந்தகம் திட்டத்தை கைவிட வேண்டாம் என்றும் தொடர்ந்து செயல்படுத்துமாறும் கேட்டுக் கொண்டதாகவும், இதற்காக என்ன உதவி தேவைப்பட்டாலும் தான் உதவ இருப்பதாகும் உறுதி அளித்ததற்கு, மேலும் அடுத்தடுத்து பல மக்கள் நலத்திட்டங்களை செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் அவை அனைத்திற்கும் இதே போன்று ஒத்துழைப்பு கொடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிலையில் தளபதி விஜய் சொன்னது போலவே தற்போது உலக பட்டினி தினத்தன்று தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம் எனும் திட்டத்தை வருகிற மே 28 அன்று தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகம், ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் பசியால் வாடும் மக்களின் பசியை போக்கும் வகையில் மதிய உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது, அந்த அறிக்கையில்,

“உலகம் முழுவதும் மே 28-ஆம் தேதி அன்று "உலக பட்டினி தினம்” அனுசரிக்கப்படுகிறது. உலகளவில் நீண்டகால பட்டினியால் வாடும் மக்களை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த தினம் ஆண்டு தோறும் அனுசரிக்கப்படுகிறது.

"தளபதி” அவர்களின் சொல்லுக்கினங்க, உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு பசி எனும் பிணி போக்கிடும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "தளபதி விஜய் மக்கள் இயக்கம்" சார்பாக "தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்" திட்டம் மூலம் வருகின்ற 28.05.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பகல் 11 மணியளவில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் மற்றும் பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒருவேளை (மதிய) உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள "தளபதி விஜய் மக்கள் இயக்கம்" சார்பாக "பட்டினி தினத்தை" முன்னிட்டு ஒரு நாள் (மதிய) உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டடுள்ளது.

இதன் மூலம் பசியால் வாடும் மக்களுக்கு இயன்றவரை உணவளித்து பசியினை போக்கும் விழிப்புணர்வினை சமுதாயத்தில் ஏற்படுத்தும் நோக்கத்துடன் "தளபதி விஜய் மக்கள் இயக்கம்" இந்த நலப்பணி செய்யப்படுகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.”

என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை இதோ…