நீண்ட காலமாக காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாக தளபதி 67 திரைப்படத்தின் டைட்டில் தற்போது வெளியானது. மிரட்டலான மாஸ் லூக்கில் விஜய் இருக்கும் தளபதி 67 திரைப்படத்தின் டைட்டிலை வெளியிடும் அதிரடியான ப்ரோமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர். படத்தின் டைட்டில் குறித்து எக்கச்சக்கமான பெயர்கள் உலா வந்த நிலையில் யாரும் எதிர்பாராத LEO - Bloody Sweet என்ற டைட்டில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணியில் தயாராகி வரும் LEO திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கிய நிலையில் தற்போது காஷ்மீரில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் SS.லலித்குமார் தயாரிக்கும் தளபதி 67 படமான LEO படத்தை ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரிக்கிறார்.

ஏற்கனவே கைதி மற்றும் விக்ரம் திரைப்படங்களின் இடையில் இருக்கும் கனெக்ஷன்களால் LCU என்றொரு யுனிவர்ஸ் உருவாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நிலையில் தற்போது இந்த யுனிவர்சில் தளபதி 67 திரைப்படமாக தயாராகி வரும் LEO திரைப்படமும் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு அனைவரது மனதிலும் நிலவி வருகிறது.

முன்னதாக வெளியான LEO திரைப்படத்தின் பூஜை வீடியோவில் கைதி திரைப்படத்தில் நெப்போலியன் எனும் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜார்ஜ் மரியன் அவர்கள் இடம் பெற்றிருந்தது. LEO படம் LCUல் சேரும் என்ற HINT என பேசப்பட்டது. அதேபோல் நேற்று பிப்ரவரி 2ம் தேதி டைட்டில் அறிவிப்பை குறித்து வெளிவந்த போஸ்டரும் கைதி மற்றும் விக்ரம் போஸ்டர்களோடு ஒத்துப்போனதால் அதுவும் ஒரு HINT என தகவல்கள் பரவின.

இதனிடையே இன்று பிப்ரவரி 3ஆம் தேதி யாரும் எதிர்பாராத வகையில் காஷ்மீர் படப்பிடிப்பிற்கு புறப்பட்ட LEO திரைப்படத்தின் படக்குழுவினரின் விமான பயணத்தின் வீடியோ வெளியானது. இந்த வீடியோவில் விக்ரம் படத்தில் ஏஜென்ட் டீனா கதாபாத்திரத்தில் நடித்த வசந்தி அவர்களும் இடம் பெற்றிருந்தது மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் LCU குறித்த பல கேள்விகளையும் ஏற்படுத்தியது.

முன்னதாக விக்ரம் திரைப்படத்தில் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்த கதாபாத்திரமாக பேசப்பட்ட ஏஜென்ட் டீனா கதாபாத்திரம் விக்ரம் திரைப்படத்தில் இறந்துவிட்டது. ஒருவேளை இப்போது தளபதி விஜயின் LEO திரைப்படத்தில் ஏஜென்ட் டீனா கதாபாத்திரம் இடம் பெறுமே ஆனால் இந்த கதை விக்ரம் திரைப்படம் நடந்த காலகட்டத்திற்கு முந்தைய சமயத்தில் நடைபெறும் கதையாக இருக்கலாம் என்றும், ஒருவேளை LEO, LCUல் இல்லாமல் தனித்துவரும் படமாக இருப்பின் நடிகை வசந்தி வேறு ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் பேசப்படுகிறது.

மறுபுறம் வசந்தி ஒரு நடன இயக்குனர்!.. குறிப்பாக தினேஷ் மாஸ்டர் அவர்களின் அணியின் முக்கிய நடன இயக்குனராக பணியாற்றுபவர். எனவே தற்போது தினேஷ் மாஸ்டரும் காஷ்மீர் புறப்பட்டுள்ளதால் பாடல் படப்பிடிப்பில் நடன இயக்குனராக பணியாற்றுவதற்காக வசந்தி அவர்கள் காஷ்மீர் சென்று இருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.

இவை அனைத்தும் ஒரு புறம் இருக்க தற்போது வெளிவந்திருக்கும் தளபதி விஜயின் அதிரடியான LEO அறிவிப்பு வீடியோவில் வரிசையாக வந்த பல கார்களும் ஒரு காரில் முகமூடி அணிந்த நபர்களும், கேங்ஸ்டர்களும் என அனைத்தும் விக்ரம் திரைப்படத்தின் விஷயங்களை நினைவுபடுத்துவதாக இருப்பதால் கட்டாயமாக LEO திரைப்படம் LCUவில் இடம்பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த இன்னும் சாத்தியமான தகவல்கள் அடுத்தடுத்து வரும் அறிவிப்புகளில் இருந்து தெரியவரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.