ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களிடையே எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் தளபதி 67. விக்ரம் திரைப்படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் நாகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 67 திரைப்படத்தின் படப்பூஜை கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில் படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வாரிசு படத்தின் ரிலீஸுக்கு பிறகு வெளியாகவுள்ளன.
முன்னதாக முன்னணி தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு அவர்களின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் தயாரிப்பில், பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் முதல்முறையாக தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா க்ரிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்யும் வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ வெளியிடும் வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே தளபதி விஜயின் ஒவ்வொரு படங்களின் இசை வெளியீட்டு விழாவிற்கும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருப்பார்கள். காரணம் தளபதியின் குட்டி ஸ்டோரி. கடைசியாக மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் பேசினார். ஆனால் கொரோனா பாதுகாப்பு காரணங்களுக்காக மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறைவான கூட்டத்தோடு நடத்தப்பட்டது. மேலும் பீஸ்ட் திரைப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை.
எனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக தளபதி விஜயின் குட்டி ஸ்டோரிக்காக காத்திருந்த ரசிகர்களை உற்சாகபடுத்தும் விதத்தில் வருகிற டிசம்பர் 24 ஆம் தேதி வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுவதாக அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்துள்ள படக்குழுவினர், இதனை அறிவிக்கும் வகையில் அட்டகாசமான வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ இதோ…