ஒட்டுமொத்த தளபதி விஜய் ரசிகர்களும் சினிமா ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த லியோ திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. பக்கா அதிரடி ஆக்சன் பிளாக் திரைப்படமாக வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற தளபதி விஜயின் லியோ படம் வருகிற நவம்பர் 24ஆம் தேதி இந்தியாவிலும் வருகிற நவம்பர் 28ஆம் தேதி உலக அளவிலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் & ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பால் தளபதி விஜய் ரசிகர்கள் தற்போது மிகுந்த உற்சாகமடைந்திருக்கின்றனர். அந்த அறிவிப்பு இதோ…

மாஸ்டர் படத்திற்கு பின் இரண்டாவது முறை இணைந்திருக்கும் தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் லியோ திரைப்படத்தின் முதல் அறிவிப்பு வந்த சமயத்தில் இருந்து இந்த லியோ படத்திற்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் குவிந்தன. தளபதி விஜயுடன் இணைந்து நீண்ட இடைவெளிக்கு பின் நடுவே த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா அவர்களின் அட்டகாசமான ஒளிப்பதிவில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கும் லியோ திரைப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

இந்திய சினிமா வரலாற்றில் முதல் நாளில் அதிகபட்ச வசூல் செய்த படமாக லியோ திரைப்படம் 148.75 கோடி வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை செய்தது. தொடர்ந்து கொண்டாடப்பட்ட லியோ திரைப்படம் முதல் வாரத்தில் 461 கோடிக்கு மேல் வசூலித்து தமிழ் சினிமாவிலேயே முதல் வாரத்தில் அதிகபட்ச வசூல் செய்த படமாக மற்றொரு வரலாற்று சாதனையை படைத்தது. இதுவரை மொத்தமாக 600 கோடிகளுக்கு மேல் வசூலித்திருக்கும் லியோ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. மேலும் வெளிநாடுகளிலும் 201 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து வெளிநாடுகளில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற மிகப்பெரிய வரலாற்று பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்தது. மேலும் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படம், தமிழ்நாட்டில் முதல் 100 கோடி ரூபாய் பகிர்வு செய்த படம், UKவில் அதிக வசூல் செய்த கோலிவுட் திரைப்படம், பிரான்சில் அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்ட கோலிவுட் திரைப்படம், வளைகுடா நாடுகளில் அதிக வசூல் செய்த தமிழ் படம், வெளிநாடுகளில் அதிக வசூல் செய்த தமிழ் படம், இலங்கையில் அதிக வசூல் செய்த தமிழ் படம், கனடாவில் அதிக வசூல் செய்த தமிழ் படம், கேரளாவில் அதிக வசூல் செய்த தமிழ் படம், ஜெர்மனியில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என பல்வேறு பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை லியோ திரைப்படம் படைத்திருப்பதாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.