தென்னிந்திய திரை உலகின் வசூல் சக்கரவர்த்தியாகவும் பல கோடி சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோக்களில் ஒருவராகவும் திகழும் தளபதி விஜய் நடிப்பில் அடுத்து வெளிவர தயாராகியுள்ள திரைப்படம் வாரிசு. முதல்முறையாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடிக்கும் வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வருகிறது.

வாரிசு திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், குஷ்பூ, யோகி பாபு, ஜெயசுதா, ஸ்ரீமன், ஸ்ரீகாந்த், ஷியாம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவில் பிரவீன் படத்தொகுப்பு செய்யும் வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார். 

ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு அவர்கள் தயாரிக்கும் வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு(2023) பொங்கல் வெளியீடாக ஜனவரியில் ரிலீஸாகும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தற்போது வெளியான தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அறிவிப்பின் காரணமாக வாரிசு திரைப்படத்தின் ரிலீஸில் பாதிப்பு ஏற்படுமா..? என நிறைய குழப்பங்கள் எழுந்துள்ளன.

முன்னதாக கடந்த 2017-ஆம் ஆண்டு தெலுங்கு தயாரிப்பாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பண்டிகை நாட்களான சங்கராந்தி(பொங்கல்) மற்றும் விஜயதசமி சமயங்களில் நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும். நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு போக மீதம் இருக்கும் திரையரங்குகள் மட்டுமே தெலுங்கில் டப் செய்யப்படும் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை மீண்டும் ஒருமுறை தற்போது அறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.

தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் துணை தலைவராக விளங்கும் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அவர்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு இதே விஷயத்தை ஊடகங்களிடம் தெரிவித்ததையும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே தெலுங்கில் வாரிசுடு என வெளியாகும் வாரிசு படத்தை வெளியிடும்போது குறைவான திரையரங்குகளே கிடைக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. 

மேலும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா மற்றும் நந்தாமரி பாலகிருஷ்ணாவின் வீர சிம்ம ரெட்டி ஆகிய படங்களும் சங்கராந்தி வெளியிடாக ரிலீசாக இருப்பதால் அந்த திரைப்படங்களுக்கு முன்னுரிமை கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக வாரிசு படத்தின் தயாரிப்பு தரப்பில் இருந்து என்னென்ன அறிவிப்புகள் வரும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.