தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஆளுமை டி.ராஜேந்தர். திரைப்படங்களில் இயக்குனராகவும் எழுத்தாளராகவும், இசையமைப்பாளராகவும், பாடகராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் பன்முகத்தன்மை கொண்ட ஆளுமையாக திரைத்துறையில் பிரபலம் பெற்றார். நடிகர் சிலம்பரசனின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய உந்துததலாக அவரது அப்பாவான டி.ராஜேந்தர் மிக முக்கியமான காரணமாக இருந்தவர்.

தற்போது இவர் ‘வந்தே வந்தே மாதரம்’ என்ற சுயாதீன பாடலை தனது டி.ஆர்.ரெக்கார்ட்ஸ் மூலமாக தமிழ் மற்றும் இந்தியில் குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ளார். இப்பாடலில் இசையமைப்பாளராகவும் பாடலாசிரியராகவும் நடிகராவும் பணியாற்றியுள்ளார் டி ராஜேந்தர். மேலும் இப்பாடலில் தனது பேரன் ஜேசனை பாடகராகவும் நடிகராகவும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்தப் பாடல் வெளியீட்டுவிழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த டி.ராஜேந்தர் வந்தே வந்தே மாதரம் பாடல் குறித்து பேசினார். மேலும் அவரது மகனும் நடிகருமான சிலம்பரசன் உலகநாயகன் கமல் நாயகன் கமல் ஹாசன் தயாரிப்பில் நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்தும் பத்து தல படம் குறித்தும் கேட்கையில்,

"நான் இன்னும் பத்து தல படம் பார்க்கல.. என் இனிய நண்பர் ஏ ஆர் ரகுமான் படத்திற்கு இறுதிகட்ட இசை வேலையில் உள்ளார். அதனால் நான் இன்னும் படம் பார்க்கல.." என்றார்.‌ மேலும் “கமல் ஹாசன் சார் திறமையை பார்த்து வளர்ந்தவன் நான். அவருடைய ராஜ்கமல் நிறுவனம் மூலம் என் மகன் சிலம்பரசனை தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தை மிகப்பெரிய பிரம்மாண்ட அளவில் சிலம்பரசன் திரை வரலாற்றில் இந்தளவு மிகப்பெரிய பட்ஜெட் படத்தை அவர் உருவாக்குகிறார். அதனால் கமல் ஹாசன் சாருக்கும் நண்பர் மகேந்திரனுக்கும் டிஸ்னிக்கும் நன்றி எப்படி சொல்வதே தெரியவில்லை. நான் அறிமுகப்படுத்திய என் மகன் இன்று மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களின் மூலம் ஒரு பெயரை பெற்று, இன்று கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல திரைப்படம் வெளியாகவுள்ளது." என்றார்.

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இயக்குனர் ஒபேலி N கிருஷ்ணன் நடித்த பத்து தல திரைப்படம் வரும் மார்ச் 30ம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.