இந்திய சினிமாவின் மிகப்பெரிய உச்சநடிகர்களில் மிகமுக்கியமானவர் சூப்ப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் எங்கிலும் ரசிகர் கூட்டத்தை தக்க வைத்துள்ளவர். தமிழ் சினிமா ஜொலிக்க தொடங்கிய காலம் முதல் இன்று வரை ரசிகர்களை பல தசாப்தங்களாக உற்சாகப் படுத்தி வருகிறார். அதே நேரத்தில் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை தக்க வைத்துள்ள ரஜினிகாந்த் அரசியலில் எப்போது வருவார் என்ற கேள்வியும் பல ஆண்டுகளாக ரசிகர்களிடம் இருந்து எழுந்தது. அந்த கேள்விக்கு விடையளிக்கும் வகையில் சில ஆண்டுகள் முன்பு ரஜினிகாந்த் அவரது ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர் முன்னிலையில் அரசியலுக்கு நேரடியாக களம் இறங்கவுள்ளதாக அறிவித்தார்.

அதனையடுத்து ரசிர்கள் பெரும் உற்சாகமடைந்து அதனை கொண்டாடினார். மிகப்பெரிய ரசிகர் கூட்டம் வாக்குகளாக மாற வாய்ப்பு உள்ளது என்று அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பும் ஏற்பட்டது. அரசியல் கட்சிக்கான வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வந்தது. ரசிகர்கள் ரஜினிகாந்த் அவர்களுக்காக தொண்டர்களாக மாறி நிறைய கள வேலைகளை பார்த்து வந்தனர். இந்நிலையில் ரஜினி அவரிடம் இருந்து வந்த அறிவிப்பு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடல் நலம் காரணமாக அரசியலில் வர முடியாது. மக்கள் பணியில் நேரடியாக இறங்கவில்லை என்றாலும் என்னால் முடிந்த சேவையை செய்து வருவேன் என்று அறிக்கை விடுத்தார். பெரும் ஏமாற்றத்தை சந்தித்த ரஜினி ரசிகர்கள் நிறைய இடங்களில் அரசியலுக்கு வரவேண்டும் என்று போராட்டமும் செய்தனர். பல தசாப்தங்களாக மக்கள் பணியில் இறங்குவார் என்ற நம்பிக்கையை ரஜினிகாந்த் இப்படி உடைத்து விட்டார் என்று கடும் விமர்சனத்திற்கு ஆளானர். அதன்பின் ரஜினிகாந்த் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். ரசிகர்கள் இந்த மாற்றத்தை முழுவதுமாக ஏற்றுக் கொண்டு வருகின்றனர். தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் அதனை தொடர்ந்து ‘ஜெய் பீம்’ பட இயக்குனர் தசெ ஞானவேல் அவர்களுடன் இணைந்து லைகா தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த தனியார் உடல்நலன் அமைப்பினர் விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், ஏன் அரசியலுக்கு வர முடியாமல் போனது என்பது குறித்து பேசியுள்ளார். அதில், "எனக்கு என் வாழ்வில் ஒரு பெரிய பரிட்சை அரசியல். அதில் நான் காலடி எடுத்து வைக்கும் தருணத்தில், எதிர்பாராத வகையில் கொரோனா வந்தது. நான் நோயெதிர்ப்பு சக்திக்காக மருந்து சாப்பிட்டுட்டு கொண்டிருந்தேன். கொரோனா 2 வது அலை தொடங்கியது. நான் அரசியலுக்கு உறுதியளித்து விட்டேன். அதிலிருந்து பின்வாங்கவும் கூடாது. நான் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டேன். நீங்கள் அரசியல் வாழ்வில் நுழைகிறீர்கள் என்பதில் எனக்கு எந்தவொரு கருத்தும் இல்லை.‌ ஆனால் ஒரு மருத்துவராக உங்களுக்கு அறிவுரை செய்கிறேன், பிரச்சாரம் போகும்போது, பொதுமக்களை சந்திக்கும் போது அதெல்லாம் கஷ்டம். அதனால் உங்களை நான் அனுமதிக்க மாட்டேன்.‌ அதையும் மீறி நீங்கள் செல்லவேண்டும் என்றால் 10 அடி தள்ளி நின்று மக்களை சந்திக்கனும். பிரச்சாரத்தில் முகக்கவசம் அணியவும் என்று நிறைய நிபந்தனை விதித்தார். நான் வேனில் ஏறினாலே முகக்கவசம் எடு‌னு சொல்லுவாங்க.. பத்து அடி னா கண்டிப்பா வாய்ப்பே கிடையாது. இதை எப்படி செய்ய முடியும். இதை எப்படி நான் வெளியே சொல்ல முடியும். அப்படி சொன்னா நான் அரசியலுக்கு வருவதில் பயந்துட்டேன்னு சொல்லுவாங்க..ஒரு தடவை முன்னாடி போய் பின்னாடி வந்தா மரியாதை என்ன ஆகும் னு பயந்தேன்..என்று மருத்துவரிடம் சொன்னேன். அதற்கு அவர் சொன்னார். எந்த மீடியா, யாரிடம் சொல்ல சொன்னாலும் வந்து நான் சொல்றேன். ரசிகர்களை கூப்பிடுங்க.. நான் சொல்றேன்.. உண்மையை சொன்னால் நம்புவார்கள் என்றார். அதன்பின் தான் நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று அறிக்கை கொடுத்தேன்." என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதனையடுத்து ரஜினிகாந்த் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.