தமிழ் சினிமாவில் தனித்துவமான திரைக்கதையை கொண்டு திரைப்படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கிய இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. ஓரம்போ படத்தின் மூலம் வசனகர்த்தாவாக திரையுலகில் அறிமுகாமான தியாகராஜா குமாரராஜா பின் ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலே அசத்தலான திரைக்கதையுடன் கேங்க்ஸ்டர் கதையை கொடுத்த தியாகராஜா குமராராஜாவிற்கு நினைத்த அளவு திரைப்படம் கை கொடுக்கவில்லை. ஆனாலும் ரசிகர்கள் தேடி பிடித்து ஆரண்யகாண்டம் திரைப்படத்தை பார்த்து இன்று வரை கொண்டாடி வருகின்றனர். அதன் பின் 8 ஆண்டுகளுக்கு பின் கடந்த 2019 ல் தனது இரண்டாவது படமான சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்து ரசிகர்களை உற்சாகமடைய செய்தார். விமர்சன ரீதியாக படம் பாராட்டப் பட்டாலும் வசூல் ரீதியாக பெருமளவு கைகொடுக்காமல் போனது. இருந்தும் அவரது ரசிகர்கள் அவரது அடுத்த திரைப்படத்திற்காக ஆவலுடன் காத்து கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் உலகளாவிய பிரபலமடைந்த இணைய தொடரான ‘மாடர்ன் லவ்’ தொடரின் சென்னை வெர்ஷனில் ஒரு எபிசோடை இயக்குனர் தியாகராஜா குமராராஜா இயக்கவிருப்பது அவரது ரசிகர்களை இன்பதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் ஒட்டு மொத்த ‘மாடர்ன் லவ் சென்னை’ தொடருக்கும் நிர்வாக தயாரிப்பாளராகவும் தியாகராஜா குமராராஜா பணியாற்றி வருகிறார். இந்த தொடரின் முன்னோட்டம் முன்னதாக வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது.

இந்நிலையில் வரும் மே 19 ல் வெளியாகும் ‘மாடர்ன் லவ் சென்னை’ இணைய தொடர் குறித்தும் தனது திரைப்பயணம் குறித்தும் நமது கலாட்டா பிளஸ் சிறப்பு பேட்டியில் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா அவர்கள் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் தியாகராஜன் குமாரராஜா வின் அடுத்த திரைப்படம் குறித்து கேட்கையில்,

"3 வது படத்திற்கு ஒன்லைன் எழுதி முடிச்சிட்டேன்.. இடையில மாடர்ன் லவ் சென்னை பண்ணதால அது அப்படியே இருக்கு.. சீக்கிரம் பண்ணனும்.. இது எடுக்க ரொம்ப காலம் ஆகாது.. ஆனால் என்னால் 4 மாதத்தில் முடித்து‌ விடுவுன் என்று உறுதியளிக்க முடியாது.. சிலநேரம் முழுபடத்தையும் எழுதி முடிக்க 30 நிமிடம் போதும். ஆனால் அந்த 30 நிமிட வேலையில் இறங்க வேண்டுமென்றால் நிறைய விஷயங்கள் பண்ண வேண்டியிருக்கு.. அந்த தருணம் எப்போ வரும் னு தெரியல..” என்றார் மேலும் தொடர்ந்து, “நான் படம் எடுக்காத போது நான் ஒழுங்கு இல்லாதவன். படம் எடுக்கும் போது நான் ஒழுக்கமானவன். எழுத்தாளனா எனக்கு ஒழுக்கமே இல்லை. ஒரு வேலையை நேரத்துக்கு முடிக்கனும்.. ஒரு நாளைக்கு 4 பேப்பர் எழுதனும் அப்படினு கிடையாது.. ஒரு இயக்குனரா ஒழுக்கம் இருக்கு.. ஏனென்றால் மற்றவரின் ஈடுபாடும் அதில் இருப்பதால் நான் அதில் சரியா நடந்து கொள்வேன்." என்றார் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா.

மேலும் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..