ஒட்டுமொத்த இந்தியாவும் இந்திய சினிமா ரசிகர்களும் பெருமை கொள்ளும் மகிழ்ச்சியான வரலாற்று நிகழ்வாக இன்று மார்ச் 13ஆம் தேதி நடைபெற்ற 95 வது ஆஸ்கார் விருது விழாவில் RRR திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதை வென்றுள்ளது. இதுவரை இந்திய சினிமா கண்டிராத பிரம்மாண்ட படைப்புகளில் ஒன்றாக இயக்குனர் SS.ராஜமௌலி இயக்கத்தில் உருவான திரைப்படம் RRR. தனது முந்தைய படைப்புகளான பாகுபலி 1 & 2 புகைப்படங்களை தாண்டிய பிரம்மாண்டமும் அதைவிட பிரம்மாண்டமான வெற்றியும் அடையும் வகையில் தயாராகி பிரம்மிப்பான படைப்பாக கடந்த 2022ம் ஆண்டு வெளிவந்து ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது RRR. தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திர கதாநாயகர்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகியோர் கதையின் நாயகர்களாக குமரன் பீம் மற்றும் அல்லூரி சீதாராம ராஜு ஆகிய கதாபாத்திரங்களில் மிரட்டலாக நடிக்க, அஜய் தேவகன் ஆலியா பட் ஸ்ரேயா சரண் சமுத்திரக்கனி ரேஸ் ஸ்டீவன்சன் ஆலிசன் டூடி ஒலிவியா மோரிஸ் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

DVV என்டர்டெயின்மென்ட் சார்பில், தயாரிப்பாளர் DVV தனயா தயாரிப்பில் உருவான RRR திரைப்படத்திற்கு KK.செந்தில்குமார் ஒளிப்பதிவில் ஸ்ரீதர் பிரசாத் படத்தொகுப்பு செய்ய MM.கீரவாணி இசை அமைத்துள்ளார். உலக அளவில் 1100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த RRR திரைப்படம் தொடர்ந்து சமீபத்தில் ஜப்பானிலும் ரிலீசாகி அங்கும் வசூல் சாதனையை படைத்தது. உலக அளவில் பல சர்வதேச விருதுகளை வென்று குவித்து வரும் RRR திரைப்படம், உலக சினிமாவில் உயரிய விருதுகளில் ஒன்றான கோல்டன் குளோப் விருதை சமீபத்தில் வென்றது. RRR திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்காக சிறந்த பாடலுக்கான கோல்டன் குளோப் விருதை இசையமைப்பாளர் MM.கீரவாணி கைப்பற்றினார். மேலும் ஹாலிவுட் க்ரிடிக்ஸ் அசோசியேசன் ஃபிலிம் அவார்ட்ஸ் எனும் சர்வதேச விருது விழாவில் ஆறு பிரிவுகளின் கீழ் RRR படம் பரிந்துரைக்கப்பட்டது. பின்னர் கடந்த பிப்ரவரி 24ம் தேதி லாஸ் ஏன்ஜலஸில் நடைபெற்ற விருது விழாவில் சிறந்த சர்வதேச திரைப்படம், சிறந்த ஆக்சன் திரைப்படம், சிறந்த ஸ்டண்ட் மற்றும் சிறந்த பாடல் (நாட்டு நாட்டு பாடல்) என நான்கு விருதுகளை RRR திரைப்படம் தட்டி சென்றது.

முன்னதாக இன்று மார்ச் 13ஆம் தேதி நடைபெற்ற உலக சினிமாவின் உயரிய விருதுகளில் ஒன்றான ஆஸ்கார் விருதுகளின் மேடையில் நாட்டு நாட்டு பாடல் உலகத்திரை பிரபலங்களுக்கு விருந்தாக சமர்ப்பிக்கப்பட்டது. அதிரடியான இசை துள்ளலான நடனம் என கண்கொள்ளாக் காட்சியாக அமைந்த RRR படத்தின் நாட்டு நாட்டு பாடலை ஆஸ்கார் அரங்கில் அமர்ந்திருந்த அத்தனை பிரபலங்களும் ஜாம்பவான்களும் கொண்டாடினர். ஏற்கனவே ஆஸ்காருக்காக சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் நாட்டு நாட்டு பாடல் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், விருது பெறுமா என்ற எதிர்பார்ப்போடு ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். இந்நிலையில் காத்திருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒட்டு மொத்த இந்தியாவே பெருமை கொள்ளும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் படமாக ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டு விருதையும் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது RRR படத்தின் நாட்டு நாட்டு பாடல். இசையமைப்பாளர் MM.கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் இருவரும் ஆஸ்கார் விருதுகளை பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து இந்திய சினிமாவின் மிகப்பெரிய ஜாம்பவான்களும் பிரபலங்களும் RRR படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

.@mmkeeravaani & @boselyricist 🙌🏻

From Ekkadoo Putti Ekkadoo Perigi to the Oscar Stage ❤️❤️❤️

The journey can never get bigger than this!! #NaatuNaatu #RRRMovie pic.twitter.com/ngFExB1MX2

— RRR Movie (@RRRMovie) March 13, 2023