தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான இயக்குனர் SS.ராஜமௌலி தனது மகதீரா திரைப்படத்திற்கு பிறகு தென்னிந்திய அளவில் கவனிக்கப்பட்டார். தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளிவந்த நான் ஈ மற்றும் பாகுபலி 1&2 ஆகிய திரைப்படங்கள் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியடைய இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக உயர்ந்தார் SS.ராஜமௌலி.

அந்த வகையில் இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கத்தில் அடுத்த பிரம்மாண்ட படைப்பாக கடந்த மார்ச் 25-ம் தேதி உலகெங்கும் பல மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸான RRR திரைப்படம் பல கோடி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று பிளாக்பஸ்டர் ஹாட்டானதோடு 1100 கோடிக்கு மேல் வசூலித்து மாபெரும் வசூல் சாதனை படைத்தது. 

DVV என்டர்டெயின்மென்ட் சார்பில் DVV.தனயா தயாரித்துள்ள RRR படத்தில் ஜூனியர் என்டிஆர் & ராம்சரண் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வர்த்தக ரீதியாக மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் விமர்சன ரீதியாகவும் அனைவரும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது அந்த வகையில் அடுத்து நடைபெறவிருக்கும் ஆஸ்கார் விருதுகளில் அனைத்து பிரிவுகளிலும் RRR திரைப்படத்தை படக்குழுவினர் பரிந்துரைத்துள்ளனர். மேலும் கோல்டன் குளோப் விருதுகளிலும் சிறந்த திரைப்படத்திற்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜப்பானிலும் RRR திரைப்படம் ரிலீஸாகி ஜப்பானிய ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இதுவரை முறியடிக்கப்படாத சாதனையாக கடந்த 27 வருடங்களாக ஜப்பானில் அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்டு பிளாக்பஸ்டர் ஹிட்டாக கொண்டாடப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் முத்து படத்தின் சாதனையை முறியடித்து, அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்டதோடு இதுவரை எந்த இந்திய படமும் எட்டாத புதிய வசூல் சாதனையையும் RRR திரைப்படம் படைத்துள்ளதாக தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.