தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன். தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி இன்று தமிழ் சினிமாவில் பல ஹிட் திரைபடங்களை கொடுத்து முன்னணி ஹீரோவாக வளர்ந்துள்ளார். இவருடைய முந்தைய படங்களான டாக்டர், டான் ஆகிய படங்கள் ரசிகர்களின் ஆதரவை பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதையடுத்து தற்போது சிவகார்த்திகேயன் பல படங்களில் பிஸியாக பணியாற்றி வருகிறார்.

அதன்படி மண்டேலா இயக்குனர் இயக்கத்தில் மாவீரன் திரைப்படத்தில் நடித்து உள்ளார். இப்படம் வரும் ஜூலை 14ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. ரிலீஸுக்கு இரண்டே வாரம் இருக்கும் நிலையில் படத்திற்கான இறுதி கட்ட வேலையில் படக்குழுவினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். மேலும் வரும் ஜூலை 2ம் தேதி மாவீரன் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படம் சிவகார்த்திகேயன் திரைபயணத்தில் மிக முக்கியமான படமாக அமையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ரங்கூன் பட இயக்குனருடன் கூட்டணி அமைத்துள்ளார். உலகநாயகன் கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு தற்காலிகமாக ‘SK21’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் இராணுவ வீரனாக சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையில் முதல் முறையாக கூட்டணி வைத்துள்ளார் சிவகார்த்திகேயன். மேலும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படங்களை தவிர இந்த ஆண்டு தீபாவளியில் சிவகார்த்திகேயனின் SciFi திரைப்படமான ‘அயலான்’ திரைப்படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

திரைத்துறையில் இப்படை பிஸியாக வலம் வரும் சிவகார்த்திகேயன் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள குட்டி ஆண் சிங்கத்தை தத்தெடுத்துள்ளார். 3 வயதாகும் ‘ஷேரு’ என்ற சிங்கத்தை சிவகார்த்திகேயன் உயிரியல் பூங்காவின் தத்தெடுக்கும் முறையின் கீழ் ஆறு மாத கணக்கில் தத்தெடுத்து உள்ளார். இதற்கு முன்னதாக இது போல சிவகார்த்திகேயன் புலி, யானை போன்ற விலங்குகளை தத்தெடுத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

மிகப்பெரிய உயிரியல் பூங்காவான வண்டலூர் பூங்காவில் இரண்டு ஆயிரத்திற்கும் மேலான உயிரனங்கள் உள்ளன. வரும் பொழுதுபோக்கு கண்காட்சிக்கு பொதுமக்கள் சுற்றி பார்ப்பதோடு பூங்கா நிர்வாகம் தத்தெடுக்கும் திட்டத்தை நடைமுறை படுத்தி வருகிறது. தத்தெடுக்கும் முறையில் தத்தெடுப்பவர் அந்த விலங்கின் பராமரிப்புச் செலவுகளை அளிக்க வேண்டும். செலவழிக்கும் தொகைக்கு வரிவிலக்கும் அளிக்கப்படுகிறது. சிவகார்த்திகேயனின் இந்த செயல் ரசிகர்களால் இணையத்தில் வைரலானது. இதையறிந்து பலரும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.