நீண்ட இடைவெளிக்கு பின் சித்தார்த் நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படம் ‘டக்கர்’ துள்ளலான காதல் கதையுடன் அதிரடி ஆக்ஷன் கதைகளத்தில் உருவான இப்படத்தினை கப்பல் பட இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் சித்தார்த் கதாநயாகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை திவ்யன்ஷா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் யோகி பாபு, அபிமன்யு சிங், முனிஸ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். PASSION STUDIOS சார்பில் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் மற்றும் ஜி.ஜெயராம் தயாரிப்பில் உருவாகியுள்ள டக்கர் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்ய ஜி.ஏ.கௌதம் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் இசையமைப்பாளர் நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.

கடந்த ஜூன் 9 ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான டக்கர் திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று நல்ல வரவேற்பை பெற்றது, விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சித்தார்த்தின் டக்கர் திரைப்படம் வெற்றி படமாக அமைந்தது.

இந்நிலையில் படத்தில் நிவாஸ் கே பிரசன்னா இசையில் உருவான மரகத மாலை பாடலின் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. பின்னணி பாடகர்கள் பிரதீப் குமார், விஜய் யேசுதாஸ் மற்றும் சின்மயி ஆகியோர் பாடியுள்ளனர். பாடலுக்கு பாடலாசிரியர் உமா தேவி வரிகள் எழுதியுள்ளர். பிரதீப் குமார் குரலில் மயக்கும் மரகத மாலை பாடல் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அப்பாடலின் வீடியோ தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

டக்கர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சித்தார்த் தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக திகழும் தயாரிப்பாளர் சசிகாந்த் முதல் முறை இயக்குனராக களமிறங்க, மாதவன், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘டெஸ்ட்’ திரைப்படத்திலும் சித்தார்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேபோல் பண்ணையாரும் பத்மினியும் மற்றும் சேதுபதி படங்களின் இயக்குனர் S.U.அருண் குமார் இயக்கத்தில் தனது சொந்த தயாரிப்பில் தற்போது தயாராகி வரும் ‘சித்தா’ திரைப்படத்திலும் கதையின் நாயகனாக சித்தார்த் நடித்து வருகிறார். இதுபோக பெயரிடப்படாத புதிய திரைப்படத்திலும் நடித்துவரும் சித்தார்த் அதை தொடர்ந்து டக்கர் படத்தின் இயக்குனர் கார்த்திக் ஜி க்ரிஷ் உடன் மீண்டும் இன்னொரு புது படத்தில் இணைய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.