கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்க வேண்டிய ஒரு அற்புதப் படைப்பை இயக்குனர் மணிரத்னம் தனது கடின உழைப்பால் நமது கண்களுக்கு விருந்தாக்கி இருக்கிறார். புகழ்மிக்க எழுத்தாளர் அமரர் கல்கி அவர்களின் மிகச்சிறந்த வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வன் திரைப்படமாக எத்தனையோ ஜாம்பவான்கள் முயற்சி செய்து கைவிட்ட நிலையில் ஐந்து தொகுப்புகள் கொண்ட நாவலை இரண்டு பாகங்களாக செதுக்கினார் மணிரத்னம். மணிரத்தினத்துடன் கைகோர்த்த எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் இளங்கோ குமரவேல் அவர்களின் கணக்கச்சிதமான திரைக்கதையில் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்தன.

இப்படி ஒரு பிரம்மாண்ட படைப்பை உருவாக்க இயக்குனர் மணிரத்தினத்திற்கு துணை நின்ற தொழில்நுட்பக் குழுவான கலை இயக்குனர் தோட்டா தரணி, ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் தங்களது உச்சகட்ட உழைப்பை கொட்டியுள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையும் பாடல்களும் பொன்னியின் செல்வனை வேறு ஒரு தளத்திற்கு உயர்த்தியது. முன்னணி நட்சத்திரங்களான சீயான் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரஹ்மான், கிஷோர், பிரபு, விக்ரம் பிரபு, ஜெயராம், அஸ்வின் கக்கமன்னு, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சோபிதா துலிபலா, ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் பொன்னியின் செல்வனின் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வெளிவந்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியுள்ளது. முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன் பாகம் 1 மிகப்பெரிய வெற்றி பெற்ற 500 கோடி வரை வசூலித்த நிலையில் பாகம் 2 ஆயிரம் கோடி வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ரிலீசான நான்கு நாட்களிலேயே பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூல் திறப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையை மக்கள் கொண்டாடும் வகையில் வெளி வந்திருக்கும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தை ரசிகர்கள் தொடர்ந்து கொண்டாடும் பட்சத்தில் ஆயிரம் கோடி இலக்கு சாத்தியமாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.