தெலுங்கு திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் பீம்லா நாயக். மலையாளத்தில் நடிகர் பிரித்திவிராஜ் மற்றும் பிஜு மேனன் இணைந்து நடித்து வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான ஐயப்பனும் கோஷியும் திரைப்படத்தின் ரீமேக்காக பீம்லா நாயக் திரைப்படம் தயாரானது.

இதனை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் கிரிஷ் ஜகர்லமுடி இயக்கத்தில் பிரம்மாண்ட பீரியட் திரைப்படமாக தயாராகும் ஹரி ஹர வீரமல்லூ திரைப்படத்தில் நடிகர் பவன் கல்யாண் தற்போது நடித்து வருகிறார். நடிகராக மட்டுமல்லாமல் அரசியல்வாதியாகவும் ஜனசேனா கட்சி எனும் கட்சியை பவண் கல்யான் நடத்தி வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் தனது கட்சி தொண்டர்களோடு முக்கிய சாலையில் காரின் மேலே அமர்ந்தபடி பவன் கல்யாண் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் உள்ள இப்டாம் என்ற கிராமத்தில் சாலை விரிவாக்க பணிகளுக்காக ஆந்திர அரசால் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. இதில் வீடுகளை இழந்த மக்களை பார்ப்பதற்காக பவன் கல்யாண் நேரில் சென்றுள்ளார்.

இப்டாம் கிராமத்திற்கு பவன் கல்யாண் வரும் விஷயம் தெரிந்து ஏற்கனவே அங்கு போலீஸ் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. மேலும் பவன் கல்யாண அங்கு வருவதாக இருந்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மக்கள் கூடும் நிலை ஏற்பட்டிருந்ததால் அவரது அந்த வருகைக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் தடைகளை மீறி காரின் மேலே அமர்ந்தபடி பொதுமக்களை காண்பதற்காக பவன் கல்யாண் சென்றது தற்போது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பவன் கல்யாண் காரின் மேலே அமர்ந்தபடி பயணம் செய்த அந்த வீடியோவும் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…