தமிழ் சினிமாவில் கலை கூட்டணிகளில் மிக முக்கியமானது இயக்குனர் இசையமைப்பாளர் கூட்டணி. இந்த கூட்டணி வரிசையில் ரசிகர்கள் அதிகம் ரசிக்கும் கூட்டணியில் இயக்குனர் பா ரஞ்சித் – சந்தோஷ் நாராயணன் கூட்டணி இருந்து வருகிறது. சமீபத்தில் வெளிநாட்டு இதழில் ‘என்ஜாய் என்சாமி’ பாடல் அங்கீகராத்திற்கு அந்த இதழின் அட்டைப் படத்தில் பாடலாசிரியர் பாடகர் அறிவு புகைப்படம் இடம் பெறாமல் சந்தோஷ் நாராயணன் மகளும் அப்பாடலின் பாடகியுமான தீ புகைப்படம் மட்டும் இடம் பெற்றது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவம் திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்த அறிவுக்கு ஆதராவாக பா ரஞ்சித் மற்றும் பலர் குரல் கொடுத்தனர். அதே நேரத்தில் தீ க்கு ஆதராவாக சந்தோஷ் நாராயணன் தனது கருத்தை பதிவிட்டனர். இந்த முரண் இந்த கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும் என்று ரசிகர்கள் பயந்த நிலையில், பா ரஞ்சித்தின் புதிய படமான ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் சந்தோஷ் நாராயணன் பெயர் இடம் பெறாமல் போனது. பின் கூட்டணி உடைந்ததை ரசிகர்கள் இதன் மூலம் உறுதி செய்தனர்.

தமிழ் சினிமாவில் இருவரும் ஒரே நேரத்தில் காலடி எடுத்து வைத்து இதுவரை இந்த கூட்டணி பிரியாமல் அட்டகாசமான பாடல்களை கொடுத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பா ரஞ்சித் தற்போது இயக்கி வரும் புதிய படமான ‘தங்கலான்’ திரைப்படத்திலும் சந்தோஷ் நாராயணன் இடம் பெறவில்லை. இந்த தொடர் நிகழ்வு ரசிகர்களை வருத்தத்திற்குள்ளாக்கியது.

இந்நிலையில் கடந்த 2021 ல் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் பா ரஞ்சித் இயக்கவுள்ளதாக அறிவித்தார். இதனையடுத்து அவர் பதிவு வைரலானது. ரசிகர்கள் சார்பட்டா பரம்பரை திரைப்படம் கொடுத்த அனுபவம் திரையரங்குகளில் பார்க்கவுள்ளதாக ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். இதே நேரத்தில் முதல் பாகத்தில் இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்தில் இசையமைப்பதில் சந்தேகம் என்றும் பா ரஞ்சித் – சந்தோஷ் நாராயணன் கூட்டணி மீண்டும் இணையுமா என்றும் இணையத்தில் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பா ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை இரண்டாம் பாகம் அறிவிப்பை பகிர்ந்து அதனுடன் “வானம் விடிஞ்சிடுச்சு காசுடா மேளத்தை” என்று குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். இதனையடுத்து சார்பட்டா பரம்பரை இரண்டாம் பாகம் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் என்று மறைமுகமாக உறுதியளிக்கிறார் என்று ரசிகர்கள் சந்தோஷ் நாராயணன் பதிவை அதிகளவு பகிர்ந்து வருகின்றனர். நிச்சயம் இந்த கூட்டணி மீண்டும் இணைந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று நம்பப்படுகிறது.

நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் K9 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்த அட்டகாசமான குத்துசண்டை படமாக உருவான சார்பட்டா பரம்பரை படத்தில் நடிகர் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், கலையரசன், ஷபீர், ஜான் விஜய், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.