தமிழ் நாட்டின் வீரமான சுதந்திர உணர்வை களத்தில் விதையிட்டவர்கள் மருது பாண்டியர்கள். சிவகங்கை மாவட்டத்தில் போர் தொடுத்த ஆங்கிலேயர்களை தமிழ் மண்ணிலிருந்து விரட்ட எதிர்த்து ஆயுதம் ஏந்தி விடுதலை போராட்டத்தை தொடங்கி போராடிய வீரர்கள் மருது சகோதரர்கள். இவர்கள் மாபெரும் விடுதலை போராட்டத்தை கையிலெடுத்து சிவகங்கையை மீட்டு அந்நாட்டு பட்டத்தரசியான வேலுநாச்சியாரை அரியணை ஏற்றிய புகழ் காலம் கடந்தும் இன்று தமிழ் வரலாறு பேசி வருகிறது.

இந்த வீரமிக்க புகழை பல கதைகளில் பல வழிகளில் தமிழ் மக்கள் பார்த்தும் வாசித்தும் வந்துள்ளனர். இத்தகைய வீரமிக்க புகழ் கொண்ட மாவீரர்களின் கதை இந்த தலைமுறைகளுக்கு எடுத்துரைக்கும் விதத்தில் பிரபல இயக்குனர் ஆர் அரவிந்த் ராஜ் திரைப்படமாக இயக்கவுள்ளார். இவர் ‘ஊமை விழிகள்’, ‘உழவன் மகன்’, ‘கருப்பு நிலா’ போன்ற படங்களை இயக்கியவர். மேலும் சமீபத்தில் முத்துராமலிங்கம் வாழ்கை வரலாற்றை ‘தேசிய தலைவர்’ என்ற பெயரில் திரைப்படமாக இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மருது சகோதர்களின் வாழ்க்கை வரலாறாக எடுக்கப்படவிருக்கும் திரைப்படத்திற்கு ‘மருது ஸ்கொயர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பெரிய மருதுவாக ஜே.எம் பஷீர் நடிக்கவுள்ளார். சின்ன மருதுவாக நடிக்க பிரபல நடிகரிடம் பேசி வருகின்றனர் படக்குழு.

இந்நிலையில் இப்படத்தில் பெரிய மருது, சின்ன மருது ஆகியோரின் தலைவியும் வீர மங்கையுமான வேலுநாச்சியாராக நடிக்க பிரபல மாடல் ஆயிஷா நடிக்கவுள்ளார். இவர் 2019 சென்னை அழகி பட்டம் பெற்றவர். புதுமுக நடிகையாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்கபோகும் ஆயிஷா தற்போது வேலு நாச்சியார் கதாபாத்திரத்திற்காக பிரபல சண்டை பயிற்சியாளர்கள் தவசிராஜ், மிராக்கல் மைக்கேல் ஆகியோரிடம் சண்டை பயிற்சி மேற்கொண்டு வருகிறார். மேலும் சிலம்பாட்டம், குதிரையேற்றம், வாள் சண்டை ஆகியவற்றை கற்று வருகிறார் ஆயிஷா. மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் மருது ஸ்கொயர் திரைப்படம் நிச்சயம் இந்த தலைமுறையினருக்கு தமிழ் மற்றும் தமிழரின் பெருமையை எடுத்துரைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.