‘பரியேரும் பெருமாள்’, ‘கர்ணன்’ போன்ற ஹிட் திரைப்படங்களை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. எளிய மக்களின் வலிகளையும் எதார்த்தத்தில் நடைபெறும் சமூக பிரச்சனைகளையும் கதையாக கொண்டு உருவாகியுள்ள மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் உதயநிதி ஸ்டாலின் அவருடைய ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கும் இப்படத்திற்குக் ஒளிப்பதிவாளர் தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய செல்வா RK படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

மாமன்னன் திரைப்படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்து வந்தது. அந்த எதிர்பார்ப்பை மேலும் சுவாரஸ்யம் கூட்டும் அளவு படத்தில் பாடல்களும் அமைந்துள்ளது. முன்னதாக மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் வெளியிடப்பட்டது. படத்தில் 7 பாடல்கள் இடம் பெற்றுள்ளது. இதில் இணையத்தில் முன்னதாக வடிவேலுவின் உருக்கமான குரலில் ‘ராசா கண்ணு’ பாடல் வெளியாகி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. பின் தொடர்ந்து ஏஆர் ரஹ்மான் பாடிய ஜிகு ஜிகு ரயில் சிறப்பு வீடியோவாக வெளியாகி டிரெண்ட் ஆனது. அதன்பின்னர் மாமன்னன் படத்தில் இடம் பெற்ற காதல் பாடலான ‘நெஞ்சமே நெஞ்சமே’ பாடல் வெளியாகியது.

இந்நிலையில் படத்தில் இடம் பெற்றுள்ள நான்காவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவான ‘மன்னா மாமன்னா’ பாடலை தெருக்குரல் அறிவு எழுதி பாடியுள்ளார். இப்பாடலை சிறப்பு வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலின் வீடியோவில் உதயநிதி ஸ்டாலின் வடிவேலு அவர்களின் போட்டோஷூட் வீடியோவும் வெளியாகியுள்ளது. தெருக்குரல் அறிவின் அட்டகாசமான வரிகளில் உருவான பாடல் தற்போது ரசிகர்களின் மனதை கவர்ந்து வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கடைசி திரைப்படம் என்று சொல்லப்படும் மாமன்னன் திரைப்படம் இந்த மாதம் 29 ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அடுத்தடுத்த அப்டேட்டுகளினால் படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பு கூடிக் கொண்டு இருக்கின்றது.

இயக்குனர் மாரி செல்வராஜ் இப்படத்தையடுத்து ‘வாழை’ என்ற படத்தையும் அதை தொடர்ந்து துருவ் விக்ரம் நடிப்பில் கபடி கதைகளத்தில் ஒரு படத்தையும் அதை தொடர்ந்து தனுஷ் தயாரிப்பில் அவர் நடிப்பில் புது படத்தையும் இயக்கவுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.