நடிகை திரிஷா குறித்தும் கதாநாயகிகள் குறித்தும் அவதூறாக பேசி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய நடிகர் மன்சூர் அலி கானுக்கு, தளபதி விஜயின் லியோ படக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. தளபதி விஜயின் அதிரடி ஆக்சன் திரைப்படமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த மெகா ஹிட் பிளாக்பஸ்டர் லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில், நடிகர் மன்சூர் அலிகானுக்கு கண்டனத்தை தெரிவித்து இருக்கிறது. அந்த பதிவில், “நடிகர் மன்சூர் அலிகானின் அவமரியாதையான பேச்சால் நாங்கள் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளோம். இத்தகைய நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது மேலும், மரியாதை மற்றும் சமத்துவத்தின் மீதான நமது முக்கிய மதிப்புகளுக்கு முற்றிலும் முரணானது. இந்த நடத்தையை நாங்கள் ஒன்றாகக் கண்டிக்கிறோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது அந்த பதிவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.

சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய மன்சூர் அலிகான் சினிமாவில் வில்லனாக நடிப்பது குறித்தும் நடிகை திரிஷா குறித்தும் அருவருக்கத் தக்க வகையில் பேசியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. சினிமாவில் வில்லனாக நடிக்கும் போது கதாநாயகிகளோடு படுக்கையறை காட்சி பலாத்காரம் செய்யும் காட்சிகள் இருக்கும் என்பது போல அனைவரும் முகம் சுளிக்கும் வகையில் நடிகை திரிஷாவை குறிப்பிட்டு மன்சூர் அலிகான் பேசியது திரை துறையிலும் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது இதை அடுத்து நடிகர் மன்சூர் அலிகானை வன்மையாக கண்டித்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதற்காக நடிகர் மன்சூர் அலிகான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகர் சங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையமும் நடிகர் மன்சூர் அலிகான் மீது ஐபிசி பிரிவு 509 பி மற்றும் இது தொடர்பான இதர பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என காவல்துறையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முன்னதாக நடிகை திரிஷா தனது சமூக வலைதள பக்கங்களில் இந்த விஷயத்தை குறிப்பிட்டு, “சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் என்னைப் பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோவைப் பார்த்தேன். அவரது பேச்சை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.. அந்த பேச்சு ஆணாதிக்க மனநிலையிலும், மரியாதைக் குறைவானதாகவும், பாலின பாகுபாட்டைப் பிரதிபலிக்கக் கூடிய மோசமான ஒன்றாகவும் இருந்தது. என்னுடன் நடிக்க வேண்டும் என அவர் தொடர்ந்து ஆசைப்படட்டும். ஆனால், இத்தகைய கேவலமான மனிதருடன் இணைந்து நடிக்காததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய வாழ்நாளில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்பது உறுதி. அவரைப் போன்றவர்களால் ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கே இழுக்கு!” என தனது வன்மையான கண்டனத்தை பதிவு செய்தார்.

இதனிடையே இது தொடர்பாக இன்று (நவம்பர் 21) பத்திரிகையாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான் இது தொடர்பாக தான் யாரிடமும் மன்னிப்பு கேட்க போவதில்லை எனவும் நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டது முற்றிலும் தவறு அதை மாற்ற அவர்களுக்கு “நான்கு மணி நேரம் கெடுவைக்கிறேன்” என்றும் “தேசிய மகளிர் ஆணையம் என் மீது நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் இதைவிட மிகவும் மோசமான முறையில் பெண்களை அசிங்கமாக பேசிய நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்யுங்கள்” எனவும் ஆவேசமாக பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.