பிரபல பாலிவுட் நடிகர்களான சித்தார்த் மல்கோத்ரா - கியாரா அத்வானி திருமணம் கடந்த பிப்ரவரி 7ம் தேதி மிக பிரம்மாண்டமாய் ராஜஸ்தான் ஜெய்சால்மரில் நடைபெற்றது. கோலாகல கொண்டாட்டத்துடன் நடைபெற்ற இந்நிகழ்வில் இயக்குனர் கரன் ஜோகர், ரோஹித் ஷெட்டி என பல பாலிவுட்டின் முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். திருமணத்தையடுத்து இணையத்தில் வெளியான திருமண புகைப்படம் அப்போது வைரலானது. மேலும் ரசிகர்கள் திரைபிரபலங்கள் அவர்களை வாழ்த்தி வந்தனர். கடந்த 2018 ல் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் ஜோடியாக திரையில் தோன்றிய கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்கோத்ரா பின் இயக்குனர் விஷ்ணுவரதன் இயக்கத்தில் வெளியான 'செர்ஷா' படத்தில் மீண்டும் ஜோடியாக இணைந்தனர். திரைத்துறையில் அதிகம் பேசப்பட்ட இந்த ஜோடி. காதலித்து வருவதாக திரையுலகினர் பேசி வந்தனர். அதன்படி இருவரும் தற்போது தற்போது கணவன் மனைவியாக இணைந்துள்ளனர்.

இந்நிலையில் திருமண நிகழ்வில் எடுக்கப்பட்ட வீடியோவை பிரத்யேகமாக நடிகர் சித்தார்த் மல்கோத்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். காதலுடன் இருவரும் மாலை மாத்திக் கொண்டு மலர் மழையில் முத்தமிட்டு கொள்ளும் அந்த வீடியோ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் இவர்களின் திருமண வாழ்விற்கு ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

கியாரா அத்வானி தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், எஸ் ஜே சூர்யா, உள்ளிட்டோர் நடிப்பில் பிரம்மாண்டமாக மூன்று மொழிகளில் உருவாகி வரும் பான் இந்திய திரைப்படமான RC 15 ல் நடித்து வருகிறார். மேலும் சத்தியம் பிரியம் கி கதா திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இவர் முன்னதாக எம்.எஸ் தோனி அன் டோல்டு ஸ்டோரி படத்தின் மூலம் பிரபலமடைந்தார். அதன் பின் லஸ்ட் ஸ்டோரிஸ், கபீர் சிங் போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்தார். இந்தியில் மட்டுமல்லாமல் தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த ‘பரத் அனே நேனு’ படத்திலும் ராம் சரண் நடிப்பில் வெளியான ‘வினய விதய ராமா’ படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.