இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான ‘ஆடுகளம்’ படத்தில் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியவர் விக்ரம் சுகுமாரன். பின் தமிழ் சினிமாவில் மதயானை கூட்டம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலே தென் தமிழக மக்களையும் அவர்களின் வாழ்வியலையும் கற்பனை கலந்த கதையுடன் கச்சிதமாக கொடுத்து கவனம் பெற்றார். பின் நீண்ட இடைவெளிக்கு பின் நடிகர் சாந்தனு முக்கிய கதாபாத்திரமாக வைத்து கிராம பின்னணி கொண்ட படத்தை இயக்கி வந்தார். அதன்படி அப்படத்திற்கு ‘இராவண கோட்டம்’ என்று பெயரிடப்பட்டது. கண்ணன் ரவி குழுமத்தினர் தயாரிப்பில் உருவான இப்படத்தில் நடிகர் சாந்தனு பாக்யராஜ் உடன் இணைந்து கயல் ஆனந்தி, பிரபு, இளவரசு, தீபா, சுஜாதா, அருள் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரவேற்கப்பட்டது. மீண்டும் தென் தமிழகத்தின் பின்னணியில் ஒரு படத்தை விக்ரம் சுகுமாரன் கையில் எடுத்ததற்கு அவருக்கு பாராட்டுகள் குவிந்தது. அதேநேரத்தில் இப்படம் கீழத்தூவல் சம்பவத்தை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது என்று சிலரும் .. வன்மத்தை விதைக்கும் படமாக இது இருக்கும் என்று சிலரும் இப்படத்திற்கு கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். இது தொடர்பாக கீழத்தூவல் சம்பவத்தை சார்ந்து உருவாக்கப்பட வில்லை என்று படக்குழு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

தடைகளை தாண்டி நாளை மே 12 ம் தேதி இராவண கூட்டம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கான முன்பதிவு ஒருபுறம் நடைபெற்று கொண்டிருக்க இந்நிலையில் படக்குழு சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. அதில்.

“மண் சார்ந்த கதையை மனிதத்தை அன்பை விதைக்கும் படைப்பாக மட்டுமே எங்கள் இராவண கோட்டம்" திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம். இப்படம் முழுக்க முழுக்க கற்பனையில் உருவாக்கப்பட்ட கதையாகும். எந்த வகையிலும் இனம், மொழி, சார்ந்து யாரையும் காயப்படுத்தும் வகையில் எந்த ஒரு காட்சியும் படத்தில் உருவாக்கபடவில்லை.

நேற்று நடந்த பத்திரிக்கையாளர் முன் வெளியீட்டு காட்சி மற்றும் பிரத்யேக காட்சியில் படம் பார்த்த பத்திரிக்கை நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் நண்பர்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளனர் மற்றும் மக்களிடையேயான ஒற்றுமையும் அன்பையும் போற்றும் இப்படத்தின் கருவை அனைவரும் பாரட்டியுள்ளனர். படத்தில் ஒரு சில இனத்தினரை காயப்படுத்தியுள்ளதாக எழுந்துள்ள வதந்திகள் முற்றிலும் பொய்யானது இப்படம் எவரையும் எந்த வகையிலும் காயப்படுத்தவில்லை தயவுகூர்ந்து வதந்திகளை நம்பி படத்தின் மீது தடை கோருவதும் படத்தை தடுக்கும் நோக்கிலான செயல்பாடுகளிலும் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.” என்று குறிப்பிட்டு வெளியிட்டுள்ளர். இதையடுத்து இராவண கூட்டம் படக்குழுவினரின் இந்த விளக்கம் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.