தங்கலான் திரைப்படத்தில் சீயான் விக்ரமுக்கு வசனங்களே இல்லையென சமூக வலைத்தளங்களில் உலா வரும் செய்திகளுக்கு விக்ரம் தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 1ஆம் தேதி வெளிவந்த தங்கலான் படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதற்காக பிரத்யேகமாக தங்கலான் டீசர் வெளியீட்டு விழாவை படக்குழுவினர் நடத்தினர். அந்த வகையில் தங்கலான் தெலுங்கு டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய சீயான் விக்ரம் டீசரில் வசனங்கள் ஏதும் இடம்பெறாததை குறிப்பிட்டு தனக்கு வசனங்களே இல்லை என பேசியிருந்தார். ஆனால் மொத்த படத்திலும் விக்ரமுக்கு வசனங்களே இல்லை முழுக்க முழுக்க ஆக்ஷன் தான் என செய்திகள் பரவின.

முன்னதாக தமிழ் டீசர் வெளியீட்டு விழாவில் பேசியபோது இந்த படத்தில் “முதல் முறை லைவ் சவுண்ட் செய்திருக்கிறேன் டப்பிங் கிடையாது ஸ்பாட்டில் பேசுவதுதான்” என விக்ரம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சீயான் விக்ரம் அவர்களின் மேலாளர் தனது X பக்கத்தில், “தெலுங்கு டீசர் வெளியீட்டில் பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு விளையாட்டாக தான் டீசரில் வசனங்கள் இல்லை என்பதை குறிப்பிட்டு “தனக்கு வசனங்களே இல்லை” தெரிவித்ததாகவும் தமிழ் டீசர் வெளியீட்டில் லைவ் சவுண்ட் பற்றி பேசியதை குறிப்பிட்டு நிச்சயமாக சீயான் விக்ரமுக்கு வசனங்கள் இருக்கின்றன எனவும்” தெரிவித்துள்ளார்.

1800-களின் காலகட்டத்தில் கேஜிஎஃப்-ல் நடைபெற்ற வரலாற்று சம்பவத்தை மையமாக வைத்து பீரியட் ஆக்சன் படமாக இயக்குனர் பா.ரஞ்சித் - சீயான் விக்ரம் கூட்டணியில் உருவாகும் தங்கலான் படம் இந்திய சினிமா ரசிகர்கள் இதுவரை பார்த்திராத அட்டகாசமான அனுபவத்தை கொடுக்கும் என சமீபத்தில் வந்த தங்கலான் டீசர் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்கார் உட்பட ஒன்பது உயரிய சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் தங்கலான் திரைப்படத்தை எடுத்துச் செல்ல திட்டமிட்டு இருக்கின்றனர். இதுவரையில் இந்திய சினிமாவில் பார்த்திராத அளவிற்கு மிகப்பெரிய படமாக மிகவும் அழுத்தமான கதைக்களம் கொண்ட ஒரு எமோஷனல் பீரியட் ஆக்சன் திரில்லர் படமாக தங்கலான் திரைப்படம் ரசிகர்களுக்கு பெரிய விஷுவல் ட்ரீட்டாக 3D தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் தங்கலான் திரைப்படத்தை PAN INDIA படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியிட பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

சீயான் விக்ரம் மற்றும் மாளவிகா மோகனன் உடன் இணைந்து பார்வதி, பசுபதி, ஹரி ஆகியோர் முக்கிய வேடங்களில் தங்கலான் திரைப்படத்தில் நடித்துள்ளனர். கிஷோர் குமார் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்யும் தங்கலான் திரைப்படத்திற்கு GV.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தங்கலான் திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் முழு வீச்சில் நடைபெற்று முழுவீச்சில் வருகின்றன. வருகிற 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தின வெளியீடாக உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சீயான் விக்ரமுக்கு தங்கலான் படத்தில் வசனங்களே இல்லையென பரவும் செய்திகளுக்கு அவரது மேலாளர் கொடுத்த விளக்கம் இதோ…