தமிழ் சினிமாவில் குறிப்பிடப்படும் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக தொடர்ச்சியாக வெவ்வேறு விதமான கதைக்களங்கள் கொண்ட திரைப்படங்களையும் நல்ல கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் ஆர்யா நடித்துள்ள காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படம் வருகிற ஜூன் இரண்டாம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. தனக்கே உரித்தான ஸ்டைலில் கிராமத்து பின்னணியில் பக்கா மாஸ் ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படங்களாக கொம்பன், மருது, விருமன் உள்ளிட்ட படங்களின் வரிசையில் இயக்குனர் M.முத்தையா உருவாக்கியுள்ள காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தில் முதல் முறையாக ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ளார்.

கடைசியாக நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக், டெடி என வரிசையாக ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனர் சக்தி சௌந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்த கேப்டன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறிய நிலையில், ஆர்யா நடிக்கும் அடுத்தடுத்த திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் சுந்தர்.சி திட்டமிட்டிருந்த பிரம்மாண்ட திரைப்படமான சங்கமித்ரா படத்தில் ஆர்யா நடிக்க இருக்கிறார். ஆர்யா மற்றும் ஜெயம் ரவி இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பதாக இருந்த அத்திரைப்படம் அந்த சமயத்தில் சில காரணங்களால் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. இதனிடையே தற்போது மீண்டும் சங்கமித்ரா திரைப்படத்தை கையில் எடுத்த இயக்குனர் சுந்தர்.சி விரைவில் அடுத்தகட்ட பணிகளை தொடங்க இருப்பதாக தெரிகிறது.

அதேபோல் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட்டான சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றியை தொடர்ந்து தயாராகும் சார்பட்டா 2 படத்திலும் ஆர்யா கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். முன்னதாக சர்தார் படத்தின் தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் Mr.X படத்தில் ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த 2022ம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான FIR திரைப்படத்தின் இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் Mr.X திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படங்களுக்காக நடிகர் ஆர்யா பிரத்தியேகமான தோற்றத்திற்காக தற்போது உடற்பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்தில், ஆர்யாவுடன் இணைந்து வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகி சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்க, இளைய திலகம் பிரபு, பாக்யராஜ், சிங்கம் புலி, ஆடுகளம் நரேன், தமிழ், மதுசூதன ராவ், அவினாஷ், RK.விஜய் முருகன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்திற்கு R.வேல்ராஜ் ஒளிப்பதிவில், வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்ய, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்தின் பதிய ட்ரீட்டாக கறி குழம்பு வாசம் எனும் ரொமான்டிக்கான பாடல் தற்போது வெளியாகி உள்ளது. கவனத்தை ஈர்த்துள்ள அந்த பாடல் இதோ...