தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்று மரியான். இயக்குனர் பரத் பாலா இயக்கத்தில் கடந்த 2013 ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மரியான்’.மாறுபட்ட கதைகளத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க அவருக்கு இணையான நடிப்பை கதாநாயகி கதாபாத்திரத்தில் வெளிப்படுத்தி அசத்தியிருப்பார் நடிகை பார்வதி. மேலும் படத்தில் உமா ரியாஸ், ஜகன், அப்பு குட்டி, விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருபார்கள். ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் மார்க் கொனிக்ஸ் ஒளிப்பதிவு செய்ய படத்திற்கு இசையமைத்திருப்பார் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான். இவரது இசையில் படத்தில் இடம் பெற்ற கொம்பே சுறா, நேற்று அவள் இருந்தால், நெஞ்சே ஏழு, இன்னும் கொஞ்சம் நேரம் ஆகிய பாடல்கள் இன்றும் ரசிகர்கள் ஸ்லாகித்து ரசித்து வருகின்றனர்.

முழுக்க முழுக்க காதல் கதையை அடிப்படையாக கொண்டு அட்வேன்ட்சர் நிறைந்த படமாக உருவான மரியான் திரைப்படம் வசூல் அளவில் வெற்றி பெறவில்லை என்றாளுல்ம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. மீனவ சமூக மக்கள் வாழ்வியல் ஒரு புறம் ஆப்ரிகா நிலபரப்பில் மாட்டி தவிக்கும் கதாநயாகன் காட்சி மறுபுறம் என நிலபரப்பு அழகியலை நேர்த்தியாக கொடுத்து கவனம் ஈர்திருப்பார்கள். இப்படத்தின் காட்சிக்கு காட்சி படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் ரசிகர்களால் கொண்டாடப் பட்டனர். உலகத்தரத்தில் காட்சியமைப்பு வியக்கவைக்கும் இசை, அசர வைக்கும் நடிப்பு என்று ரசிகர்களால் இப்படம் இன்றும் கொண்டாடப் பட்டு வருகிறது. குறிப்பாக தனுஷ், பார்வதி, ஏ ஆர் ரஹ்மான் ஆகியோர் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாகவும் மரியான் திரைப்படம் இருந்து வருகிறது. மேலும் விருதுகளையும் இப்படம் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த மரியான் திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ரசிகர்கள் 10 years of maryan என்ற ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தி இணையத்தில் அவரவர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த நிகழ்வை சிறப்பாக்கும் வகையில் ஏ ஆர் ரஹ்மான் மற்றும் தனுஷ் ஆகியோர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் முன்னிலையில் படக்குழுவினருடன் நேரலையில் வந்தனர். இந்த நேரலையில் தனுஷ், பார்வதி, ஏ ஆர் ரஹ்மான் , இயக்குனர் பரத் பாலா, பாடகர் விஜய் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இதில் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்தும் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் உருவான விதம் குறித்தும் படக்குழுவினர் ரசிகர்கள் முன்னிலையில் கலந்துரையாடினர். ஏராளமான் ரசிகர்கள் ஏ ஆர் ரஹ்மான் நேரலையை கண்டு ரசித்தனர். மேலும் அந்த வீடியோவை ரசிகர்கள் கொண்டாடி பகிர்ந்து வருகின்றனர்.