கோலிவுட்லில் நடிகராக அறிமுகமாகி பாலிவுட் வரை பிரபலமடைந்து தற்போது ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கும் ஆகச் சிறந்த நடிகரான தனுஷ் பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகனாக திகழ்கிறார். அந்த வகையில் இந்த ஆண்டில்(2022) தொடர்ச்சியாக தனது திரைப்படங்களால் ரசிகர்களுக்கு விருந்து வைத்தார் தனுஷ்.

முன்னதாக இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மாறன் திரைப்படம் நேரடியாக Disney+ hotstar தளத்தில் ரிலீஸாக தொடர்ந்து, அவெஞ்சர்ஸ் எண்டு கேம் படத்தின் இயக்குனர்களான ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் அதிரடியான ஆக்சன் ப்ளாக் படமாக வெளிவந்த ஹாலிவுட் படமான தி க்ரே மேன் திரைப்படத்தில் மிரட்டலாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

தொடர்ந்து தனது யாரடி நீ மோகினி & வேலையில்லா பட்டதாரி படங்களின் வரிசையில் தனுஷ் நடித்து வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டடிக்க, நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது சகோதரரும் இயக்குனருமான செல்வராகவன் இயக்கத்தில் இரட்டை வேடத்தில் தனுஷ் நடித்து வெளிவந்த நானே வருவேன் திரைப்படமும் கவனிக்க வைத்தது.

இந்த வரிசையில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், அடுத்ததாக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்திலும், தேசிய விருது பெற்ற தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் புதிய திரைப்படத்திலும் தற்போது தனுஷ் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஆண்டில் IMDb-ன் மிகவும் பிரபலமான முதல் 10 இந்திய நட்சத்திரங்களின் பட்டியலில் நடிகர் தனுஷ் முதல் இடத்தை பிடித்துத்துள்ளார். தனுஷ், ஆலியா பட், ஐஸ்வர்யா ராய், ராம்சரண், சமந்தா, ரித்திக் ரோஷன், கியாரா அத்வானி, ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன், யஷ் ஆகியோர் வரிசையாக இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.