தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 7 நாட்களுக்குப் பிறகு மீண்டும் மது விற்பனை தொடங்கியது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் திறக்கப்பட்ட மதுக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில், அதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், தமிழகத்தில் மதுக்கடைகளைத் திறக்கவும் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

அதன்படி, தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன.

இதனால், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 7 நாட்களுக்குப் பிறகு, மீண்டும் மது விற்பனை தொடங்கியது. சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட, திருவள்ளூர் மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்படவில்லை.

குறிப்பாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 135 டாஸ்மாக் கடைகளில், 24 கடைகள் மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதியில் உள்ள மதுபிரியர்கள் விரக்தியடைந்துள்ளனர்.

அதேபோல் மால்கள், வணிக வளாகம், கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியிலும், இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால், அந்த பகுதியில் உள்ள மதுபிரியர்களும் மது கிடைக்காமல் விரக்தியடைந்துள்ளனர்.

சேலம் மாநகராட்சியில் மட்டும் 50 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அங்கு, கிருமிநாசினி கையில் தெளிக்கப்பட்ட பின்னரே மது வாங்க வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும், மது வாங்க வருபவர்களுக்கு முதலி டோக்கன் வழங்கப்படுகிறது. அந்த டோக்கனில் மது வாங்க வரும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது