உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,00,220 ஆக அதிகரித்துள்ளது.

3 ஆம் உலகப் போர் ஏற்பட்டால் கூட, இவ்வளவு பெரிய பாதிப்பும், தாக்கமும் ஏற்பட்டிருக்குமா என்பது கூட சந்தேகம் தான். அந்த அளவுக்கு நினைத்துக்கூடப் பார்க்க முடியாத பாதிப்புகளையும், விளைவுகளையும் உலகம் முழுவதும் கொரொனா வைரஸ் ஏற்படுத்தி வருகிறது.

coronavirus death toll 3 lakh worldwide

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் தான், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுகிறது. அந்நாட்டில், நேற்று ஒரே நாளில் 26 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அந்நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14 லட்சத்து 56 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 

மேலும், அமெரிக்காவில் ஒரே நாளில் 1,754 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 85,813லிருந்து, 87 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, ஸ்பெயினில் 2 லட்சத்து 72 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதால், அந்நாட்டில் மொத்த பாதிப்பு  எண்ணிக்கை 2 லட்சத்து 52 ஆயிரமாக உயர்ந்துள்ளது. 

coronavirus death toll 3 lakh worldwide

இங்கிலாந்து மற்றும் இத்தாலியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தலா 2 லட்சத்து 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஆனாலும், அங்கு கொரோனா தடுப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

பிரேசிலில் ஒரே நாளில் 13 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால், அந்நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டி உள்ளது. அந்நாட்டில், அங்கு கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. 

குறிப்பாக, நேற்று ஒரு நாளில் உலகம் முழுவதும் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக, உலகளவில் கொரோனாவால் 44.78 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,00,220 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி அதிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 17 லட்சமாக அதிகரித்துள்ளது.