டாஸ்மாக் கடைகளை மூட உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளைத் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

Supreme Court permits opening of Wine Shop in Tamil Nadu

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு சார்பில் முகுல் ரோத்தஹி ஆஜராகி வாதிட்டார். அப்போது, ஆன்லைனில் மது விற்பனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அது தொடர்பாக வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அதன்படி, “ஆன்லைனில் தற்போதைக்கு மதுபானம் விற்பது சாத்தியமில்லை என்றும், மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது” என்றும், தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. 

மேலும், “மது வாங்க வருபவர்கள் அனைவரும் ஆதார் கார்டு கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனை ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும்” வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

“தமிழகம், டெல்லி போன்ற சிறிய மாநிலம் இல்லை என்றும், ஆன்லைனில் விற்பனை செய்தால் கலப்பட மது விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளதாகவும்” வாதிடப்பட்டன.

Supreme Court permits opening of Wine Shop in Tamil Nadu

அத்துடன், “டாஸ்மாக் திறக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை சார்ந்த முடிவு என்றும், இதனால் மதுக்கடைகள் திறக்க அனுமதி தர வேண்டும்“ என்றும், வாதிடப்பட்டது.

இந்த வழக்கில், உயர்நீதிமன்ற விசாரணையின் போது தமிழக அரசு விரிவான பதிலளிக்க அவகாசம் கோரிவிட்டு, தற்போது உச்சநீதிமன்றத்தில் கடைகளைத் திறக்க வேண்டும் என கோருவது வரம்பு மீறல்” என்று எதிர்த்தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. 

இந்நிலையில், தமிழகத்தில் மதுக்கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்ற பிறப்பித்த உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் கூறினார். 

அத்துடன், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக, ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.