கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டும் போதுமா? என்று உலக சுகாதார அமைப்பு கேள்வி எழுப்பி, அதற்கும் என்ன செய்ய வேண்டும் என்றும் விளக்கமும் அளித்துள்ளது.

கொரோனா வைரஸின் 3 வது நிலையான சமூக பரவலைத் தடுக்கும் விதமாக, இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், சாலைகள் மற்றும் வீதிகளில் நடக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டும் பலன் தராது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயேசுஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அவர், “ ஊரடங்கு மூலம் மக்களை வீட்டுக்குள் இருக்க வைப்பது சுகாதாரத்துறை மீதான அழுத்தத்தை மட்டுமே குறைக்கும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“அதே நேரத்தில், கொரோனாவை ஒழிக்க இந்த ஊரடங்கு மட்டும் உதவாது என்றும், ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தை கொரோனாவை ஒழிக்கும் பணியில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

மேலும், “ கொரோனாவை அழிக்கும் 2 வது வாய்ப்பை நீங்கள் உருவாக்கியுள்ள இந்த நேரத்தில், இதை எப்படிப் பயன்படுத்தப் போகிறீர்கள்? என்பது தான் தற்போது உள்ள மிகப் பெரிய கேள்வியாக உள்ளது” என்றும் சுட்டிக்காட்டி உள்ளார்.

அத்துடன், “கடுமையான நடவடிக்கைகள், சோதனைகள் ஆகியவை தொற்றைக் கண்டறியச் சிறந்த வழியாக மட்டுமல்லாமல், அது கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கவும் சிறந்த வாய்ப்பாக உள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக, “கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவரிடமிருந்து, யாருக்கு அந்த தொற்று பரவியது என்பதைக் கண்டறியத் தெளிவான திட்டம் அரசுக்குத் தேவை” என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் வலியுறுத்தி உள்ளார்.