நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிடுவது என விஜய் மக்கள் மன்றம் முடிவு செய்துள்ள நிலையில், அதனை வெளிப்படையாக அறிவிக்கவும் தலைமை தயக்கம் காட்டி வருகிறது.

நடிகர் விஜய்க்கு அரசியலில் நுழைய வேண்டும் என்ற ஆசை சிலகாலமாகவே இருந்து வருகிறது. இருப்பினும் நடிகர் விஜய் இதுவரை நேரடி அரசியலில் களமிறங்கவில்லை. சரியான நேரத்தில் அரசியலுக்கு வர காத்திருக்கிறார் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர். இதனிடையே, விஜய்யின் பிறந்தநாளுக்கு போஸ்டர் அடிக்கும்போது எல்லாம் வருங்கால முதல்வரே என்கிற வாசகத்தை மறக்காமல் வைத்துவிடுகிறார்கள் ரசிகர்கள். எம்ஜிஆர் நடிகராக இருந்து முதல்வராக உயர்ந்த பின்னர் தமிழ் சினிமாவின் ரசிகர் கூட்டத்தை கவரும் ஒவ்வொரு நடிகருக்கும் அரசியலில் குதிக்கும் கனவு ஆட்டி படைக்காமல் இல்லை. அதற்கு நடிகர் விஜயின் விதிவிலக்கு இல்லை. ஆரம்பம் முதலே திமுகவுடன் நெருக்கம் காட்டிய விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் ஆகியோர் காவலன் திரைப்படத்திற்கு எழுந்த நெருக்கடிக்கு பின்னர் அதிமுகவிற்கு நேரடியாக ஆதரவு கரம் நீட்டினர். 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பல தொகுதிகளிலும் விஜய் மக்கள் மன்றத்தின் உறுப்பினர்கள் பலரும் அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

அதனைத்தொடர்ந்து தலைவா திரைப்படத்தின் வெளியீட்டின்போது அதிமுகவுடன் மோதல் போக்கு உருவாக சர்க்கார் திரைப்படம் வரை விஜய் மற்றும் அதிமுகவினர் இடையே மோதல் நீடித்தது. உடனடியாக விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் ஆர்வம் காட்டி வரும் போதும், தந்தை கருத்துக்கு எதிராக பொங்கி எழுந்து அவருக்கு எதிராக நீதிமன்றம் வரை சென்ற விஜய், சத்தமில்லாமல் ஊரக உள்ளாட்சி தேர்தலில் முன்னோட்டம் ஒன்றை நிகழ்த்தி பார்த்தார். 176 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியிட்ட விஜய் மக்கள் மன்றத்தினர் 114 உள்ளாட்சிகளில் வெற்றி பெற்று பலரையும் ஆச்சரியப்படுத்தினர்.இதன் பின்னர் வெற்றி பெற்றவர்களை விஜய் நேரடியாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நகராட்சி தேர்தலின்போதும் பேரூராட்சிகளில் கவனம் செலுத்தும் விஜய் மக்கள் மன்றத்தினர் ஒட்டுமொத்தமாக பல நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் முக்கிய பதவிக்கு போட்டியிட உள்ளனர். எனினும் விஜய் மக்கள் மன்றம் என்ற பெயரில் ஒரு சின்னத்தில் போட்டியிடாமல் சுயேச்சை வேட்பாளர்களாக அவரவர் சொந்த செல்வாக்கில் போட்டியிட உள்ளனர். போட்டியை நேரடியாக எதிர்கொள்ளாமல் சத்தமில்லாமல் ஆழம் பார்ப்பது விஜயின் அரசியல் நகர்வு என விஜய்யின் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளை வர்ணிக்கிறார் விமர்சகர் பிஸ்மி.

இந்நிலையில் 2026-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான முன்னோட்டமாக விஜய் சத்தமில்லாமல் காய் நகர்த்துவதாகவும் நகராட்சிகளில் விஜய் மக்கள் மன்றத்தினர் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறுகிறார் பத்திரிக்கையாளர் பரத். வெளிப்படையான தேர்தலில் போட்டியிட தயாராகி விட்ட பின் நேரடியாக அறிவித்து பிரச்சாரம் செய்து தேர்தலை விஜய் எதிர்கொண்டால் அவரது ரசிகர்களை உற்சாக மூட்ட முடியும். அதே வேளையில் மக்களின் செல்வாக்கு என்ன என்பதையும் விஜய் அளக்கும் ஒரு வாய்ப்பாக இது அமையும்.

ஆனால் விஜய் சத்தமில்லாமல் மக்களின் மனதில் உள்ள ஆதரவை அளக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார். சட்டமன்ற தேர்தலுக்கும் உள்ளாட்சி தேர்தலுக்குமிடையே சித்தாந்த வேறுபாடுகளும் உள்ளதால் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் எந்த வகையிலான படிப்பினையை விஜய்க்கு ஆதரவு உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.