ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RBI Officials

நாடு முழுவதும் 73-வது குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள ரிசர்வ் வங்கியின் அலுவலக வளாகத்தில் நேற்று காலை தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிலையில் நிகழ்ச்சியின் முடிவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது. அப்போது அதிகாரிகள் சிலர் எழுந்து நிற்காமல் இருக்கையில் அமர்ந்திருந்தனர். இதைப்பார்த்து ஆவேசம் அடைந்த பத்திரிகையாளர் ஒருவர், தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலின்போது ஏன் எழுந்து நிற்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அதிகாரிகள், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது எழுந்து நிற்க வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை. இதுதொடர்பாக கோர்ட்டே உத்தரவு வழங்கி இருக்கிறது என்று தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்படும்போது அனைவரும் கட்டாயம் எழுந்திருக்க வேண்டும்  என்று தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்தப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள், இனிமேல் பண்ணுகிறோம் என்று தெரிவித்தார்.

மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியது. தமிழகத்தில் தமிழக அரசு பிறப்பித்த ஆணையை அவமதித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த சம்பவத்தில் அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன. தமிழக பாஜகவும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்ததாக ஆர்பிஐ அதிகாரிகள் மீது சென்னை மாநகர காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வங்கி அதிகாரிகளின் இந்த தவறான செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். போலீஸ் தரப்பில், உரிய புகார் அளித்தால் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டு வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் ஆன்லைன் வாயிலாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகார் மனுவில், அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கி அதிகாரிகளின் இந்த செயலால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. தொடர்ந்து, அதிகாரிகளிடம் இன்று போலீசார் நேரடியாக விசாரணை நடத்த உள்ளனர். அதனைத்தொடர்ந்து இன்று காலை11 மணிக்கு  ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி வங்கிகளை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.