காவல்வதை சாவுகள் தொடர்வது வெட்கக் கேடானது எனவும், மணிகண்டணின் சாவுக்கு காரணமான காவல் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து, சிறப்புப் புலனாய்வு குழுவின் மூலம் உரிய விசாரணை நடத்திட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் காவல் நிலையத்தில் நீர்க்கோழியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற கல்லூரி மாணவர் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் 6 மணி நேரம் கழித்து விடுவிக்கப்பட்ட நிலையில் வீட்டில் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் விசாரணையின் போது அடித்து துன்புறுத்தியதால்தான் மகன் இறந்தான் என அவரது பெற்றோர்கள் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தங்கள் மகனின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும், உடன் 1 கோடி ரூபாய் நிவாரண வழங்க வேண்டும் என அவரது பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதேபோல் காவல் நிலையத்தில் பணிபுரிந்த 7 காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவரது உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாணவனின் இந்த மரணம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவரின் மரணம் குறித்து பலரும் பல வகையில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இந்த விவகாரத்தில் மாணவர் மரணத்திற்கு காரணமாக சொல்லப்படும் காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் “தி.மு.க. அரசு பொறுப்பேற்ற ஆறு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற கல்லூரி மாணவன் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

காவல்துறையினரின் இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் காவல்வதை சாவுகள் தொடர்வது வெட்கக் கேடானது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சி தலைவர் தொல் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின் வருமாறு:-

அதில் “இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள நீர்க்கோழியேந்தல் கிராமத்தைச் சார்ந்த மாணவன் மணிகண்டன் அண்மையில் காவல்துறை விசாரணைக்குப் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

கீழத்தூவல் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவனை விசாரணை என்னும் பெயரில் தாக்கப்பட்டதனால் தான் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த்தாகவும் மணிகண்டனின் பெற்றோர் தரப்பில் அய்யப்படுகின்றனர்.

தமிழகத்தில் இவ்வாறான காவல்வதை சாவுகள் தொடர்வது வேதனையளிக்கிறது. இது வெட்கக்கேடான ஒன்றாகும். காவல்துறையினரின் இத்தகைய போக்கை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்.

நல்ல உடல்நலத்துடன் அழைத்துச் செல்லப்பட்ட ஒரு இளைஞன் திடீரென உயிரிழந்திருப்பதற்கு விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகளே பொறுப்பாகும். எனவே, அவ்வதிகாரிகள் மீது உடனடியாக துறைசார் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். அத்துடன் சிறப்புப் புலனாய்வு குழுவின் மூலம் உரிய விசாரணை நடத்தி சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென விசிக சார்பில் வலியுறுத்துகிறோம்.

காவல் விசாரணயில் பலியான மணிகண்டன் குடும்பத்திற்கு ரூ.ஒரு கோடி இழப்பீடு வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கவும் ஆவன செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.