சென்னையில் ஓடும் அரசுப் பேருந்தின் கூரை மீது ஏறி மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் கடந்த காலங்களில் கல்லூரி மாணவர்களிடையே இருந்த ரூட் தல பிரச்சனையில், மாணவர்கள் பேருந்தில் பட்டாக் கத்திகளுடன் மோதிக்கொள்ளும் மோசமான கலாச்சாரம் உருவானது.

இதனையடுத்து, சென்னை மாநகர காவல் இணை ஆணையர் சுதாகர் தலைமையில், சென்னையில் உள்ள வெறும் 6 வழித் தடங்களில் மட்டும் சுமார் 90 ரூட் தல மாணவர்கள் இருப்பதைக் கண்டறிந்தனர்.

இதனையடுத்து, அவர்களை அழைத்துப் பேசிய காவல் இணை ஆணையர் சுதாகர், அடுத்த 6 மாதத்துக்கு எந்த பிரச்சனையிலும் ஈடுபட கூடாது என்று எழுதி வாங்கி, எச்சரித்து அனுப்பினார். அதை மீறி தகராறில் ஈடுபட்டால், கைது செய்யப்படும் மாணவர்கள், சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று அவர் கடுமையாக எச்சரித்து அனுப்பினார்.

இந்நிலையில், சென்னை மந்தைவெளியிலிருந்து பிராட்வே செல்லும் அரசு பேருந்தில் ஏறிய ஆயிரம் விளக்கு நியூ கல்லூரி மாணவர்கள் இருவர், ஓடும் பேருந்தில் ஜன்னலில் கால் வைத்து கூரை மீது ஏற முயற்சி செய்தனர்.

அப்போது, பேருந்திலிருந்தவர்கள், அவர்களை கீழே இறங்கும்படி கூறியுள்ளனர். ஆனால், அந்த மாணவர்கள் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், பேருந்தின் கூரை மீது ஏறி ரகளையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, பேருந்து அண்ணாசாலை பெரியார் சிலை அருகே வந்ததும், அங்கு நின்றிருந்த போலீசாரின் உதவியுடன், பொதுமக்கள் இரண்டு மாணவர்களையும் பிடித்துக் காவல் நிலையில் ஒப்படைத்தனர். பின்னர், இருவரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, சென்னையில் கடந்த சில மாதங்களாக ரூட் தல மாணவர்கள், சத்தமில்லாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் பேருந்தின் மீது ஏறி ரகளையில் ஈடுபட்டுள்ளது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.