டைல்ஸ் தரை உடைந்து விபத்துக்குள்ளானதில், அங்கு நின்று பேசிக்கொண்டிருந்த அமைச்சர் செல்லூர் ராஜூ நூலிழையில் உயிர் தப்பினார்.

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, மதுரை செல்லூர் பகுதியில் கபடி விளையாட்டு வீரர்களின் சிலையை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை நேரில் வந்து ஆய்வு செய்த தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, செய்திளார்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “மதுரையின் நுழைவுவாயிலாக இருக்கக்கூடிய சில முக்கியமான சந்திப்புகளில் தொன்மை வாய்ந்த நினைவுச் சின்னங்களை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக” குறிப்பிட்டார்.

மேலும், “கபடி வீரர்கள் அதிகம் உள்ள செல்லூர் பகுதியில் கபடி வீரர்களின் சிலை அமைப்பதில் பெருமை அடைகிறோம் என்றும், கபடி வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

குறிப்பாக, “நாம் எல்லாம் மதுரைக்காரர்கள், எனவே மதுரையை நாம் தான் பெருமைப்படுத்த வேண்டும்” என்றும் அவர் சினிமா பாணியில் பேசினார்.

அமைச்சர் செல்லூர் ராஜூ பேசிக்கொண்டிருக்கும் போது, அவருடன் வந்த கட்சி தொண்டர்கள், சிலை நிறுவப்பட்டுக்கொண்டிருக்கும் ரவுண்டானாவின் மீது நின்றுகொண்டனர். அப்போது, திடீரென ரவுண்டானா மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த டைல்ஸ் திடீரென உடைந்து 5 அடிக்கு பள்ளம் ஏற்பட்டது.

இதில், அமைச்சர் செல்லூர் ராஜூவை சுற்றி பின்னால் நின்ற அதிமுக தொண்டர்கள் அப்படியே, பல்லத்தில் தவறி விழுந்தனர். அப்போது, அமைச்சர் செல்லூர் ராஜூ ஒரு அடி சற்று தள்ளி நின்றுகொண்டிருந்ததால், அவர் நூலிழையில் தப்பினார்.

இதனையடுத்து, அங்கு கூடி நின்றவர்கள் பள்ளத்தில் விழுந்தவர்கள், கை தூக்கிவிட்டனர். இதனால், அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.