காதல் கைகூடாத விரக்தியில், அம்மன் சிலையை சேதப்படுத்திய இளைஞரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

விரக்தியின் உச்சத்தில், மன உலைச்சலில் இருப்பவர்கள் பெரும்பாலும், யார் மீது கோபத்தைக் காட்டுவது என்று தெரியாமல், தான் தினமும்  வணங்கும் தெய்வத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது வழக்கம். இதைக் கேட்பவர்களுக்கு, அது அவர்களுடைய இயலாமை என்ற புரிதல் இருக்கும். அப்படிப்பட்ட சம்பவம் தான், வெறும் வாய் வார்த்தையைத் தாண்டி, சாமியையே தண்டிக்கும் அளவுக்கு நடந்துள்ளது.

Kanyakumari youth arrested amman statue
  
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம், தெற்கு சாலையைச் சேர்ந்த 24 வயதான ரமேஷ், அப்பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.

அப்போது, அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன் கோவில் திருவிழாவில், அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்றபோது, அந்த பெண்ணின் உறவினர்கள் இதைக் கவனித்துள்ளனர். 

இதனால், கடும் ஆத்திரமடைந்த இளம் பெண்ணின் உறவினர்கள், கோயிலில் வைத்தே அவரை கடுமையாகத் தாக்கி உள்ளனர்.

இதனால், மனமுடைந்த ரமேஷ், படுகாயங்களுடன் கோயிலுக்குள் சென்று, அங்கு அம்மன் முன்பு, “ தன்னைத் தாக்கியவர்களுக்குத் தக்க தண்டனை நீ கொடுக்க வேண்டும்” என்று வேண்டிக்கொண்டார். ஆனால், ரமேஷ் வேண்டிக்கொண்டபடி, தாக்கியவர்களுக்கு எந்த தண்டனையும் கிடைக்கவில்லை. 

இதனால், கடும் மன உலைச்சலுக்கு ஆளான ரமேஷ், மீண்டும் கோயிலுக்குள் அம்மன் முன்னாடி வந்து நின்று, கோபத்தில் நிறையக் கேள்விகளைக் கேட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில், எல்லை மீறிய ரமேஷ், சாமி சிலை என்று கூட பார்க்காமல், அம்மன் சிலையை அடித்து உடைத்து கடுமையாகச் சேதப்படுத்தி உள்ளார்.

Kanyakumari youth arrested amman statue

அந்த நேரத்தில், அங்கு ஆட்கள் சிலர் வருவதைக் கண்ட ரமேஷ், அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார். அப்போது, அவனது செல்போன் அங்கேயே தவறி விழுந்துள்ளது.

இதனையடுத்து, அம்மன் சிலை சேதமடைந்தது கண்டு கடும் அதிர்ச்சியடைந்த ஊர்மக்கள், கோயிலில் கொள்ளை முயற்சி நடந்துள்ளதாகக் கருதி உள்ளனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், அம்மன் சிலை சேதப்படுத்தப்பட்டது குறித்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கோயிலில் ரமேஷ் தவிர விட்ட செல்போன் கண்டெடுக்கப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், செல்போன் ரமேஷ் உடையது என்பதைக் கண்டறிந்தனர். இதனையடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில், அம்மன் மீது கோபத்திலிருந்ததால், இப்படிச் செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து, அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, காதல் கைகூடாத விரக்தியில், இளைஞர் ஒருவர் அம்மன் சிலையைச் சேதப்படுத்திய சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.