தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது பல்வேறு விதமான சுவாரசியங்களும் - சோகங்களும் நிகழ்ந்துள்ளன. அது தொடர்பான ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்..

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கடந்த 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்ற நிலையில்,நேற்று காலை முதல் தற்போது வரை வாக்கு எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில், வாக்கு எண்ணிக்கை முடிய முடிய ஒவ்வொரு பகுதிகளுக்கான முடிவுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதில், சில இடங்களில் ஆச்சரியமான நிகழ்வுகளும், சுவாரசியமான நிகழ்வுகளும் நடந்துள்ளன.

அதே நேரத்தில், சில இடங்களில் தள்ளுமுள்ளு, வாக்குவாதம், தடியடி என பல்வேறு காட்சிகளைக் கடந்து, உள்ளாட்சிப் பதவிகளுக்கான வாக்குகளை‌ எண்ணும் பணிகள் தற்போது வரை விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.



அதன்படி, சென்னை வில்லிவாக்கம் ஒன்றிய 1 வது வார்டு கவுன்சிலராக போட்டியிட்ட திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் சகோதரர் பிரபு வெற்றிபெற்றுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு 2 வது வார்டு உறுப்பினராகத் திருநங்கை ரியா, திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற திருநங்கை ரியாவுக்கு கனிமொழி எம்.பி. வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் காட்டிநாயக்கந்தொட்டி கிராம ஊராட்சி தலைவராக 21 வயது கல்லூரி மாணவி சந்தியா ராணி வெற்றி பெற்றார். பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வரும் சந்தியா ராணி, 210 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஊராட்சி மன்ற தலைவராகி உள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பூசலாங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட 22 வயது பி.பி.ஏ. படித்து வரும் இளம்பெண் ஆர்.சுபிதா, வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

சேலம் அயோத்தியாப்பட்டினம் ஊராட்சி பூவனூர் சுக்கம்பட்டியில் 3 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட 22 வயதான பிரீத்தி வெற்றி பெற்றார். முதுகலை ஆங்கிலம் 2 ஆம் ஆண்டு படிக்கும் பிரீத்தி, பாமக வேட்பாளர் பூங்கோதை செல்வத்தை விட 1,050 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் மேட்டுப்பளையும் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குச் சுயேச்சையாகப் போட்டியிட்ட 82 வயது மூதாட்டி விசாலாட்சி வெற்றி பெற்றுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கான்சாபுரம் பஞ்சாயத்தில் துப்புரவுத் தொழிலாளியாக பணியாற்றி வந்த சரஸ்வதி, தனது வேலையை, ராஜிநாமா செய்து விட்டு, கான்சாபுரம் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். இந்த தேர்தலில் அப்பகுதி மக்கள் அவரை வெற்றி பெற செய்துள்ளனர். இதனால், சரஸ்வதி கான்சாபுரம் பஞ்சாயத்துக்குத் தலைவராகியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தனசேகரனின் 2 மனைவிகள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் மாத்தூர் கிழக்கு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ஏ.மலர்விழி, டி.மஞ்சுளா ஆகிய இருவரும் போட்டியிட்டனர். இருவரும் தலா 409 வாக்குகள் பெற்றதால், குலுக்கல் முறையில் டி.மஞ்சுளா ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

கோவை மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் ஆறுகுட்டி எம்.எல்.ஏ. மகள் அபிநயா வெற்றி பெற்றுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் 11 வது வட்டத்தில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் முதன் முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

திருச்சி மண்ணச்சநல்லூர் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் போட்டியிட்ட மனைவி தோல்வியடைந்த நிலையில், அவரது கணவர் வெற்றி பெற்றார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் 4வது வார்டில், அதிமுக எம்.எல்.ஏ. பரமேஸ்வரியின் கணவர் முருகன் தோல்வி தோல்வி அடைந்தார்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வாக்கு எண்ணும் மையம் முன்பு, சாலை மறியலில் ஈடுபட்டோர் மீது போலீஸ் தடியடி நடத்தியதால், அந்த இடம் போர்க்களம்போல் காட்சி அளித்தது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சக்திவேல் முருகன், மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார். இவர் 2001 முதல், 2006 ஆம் ஆண்டு வரை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார்.

அதேபோல், பெரம்பலூர் ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற 72 வயதான மணிவேல், உடல் நலக்குறைவால் பரிதாபமாக உயிரிழந்தார். வெற்றிச் சான்றிதழைப் பெற்றுச் சென்ற நிலையில், தான் வெற்றி பெற்ற அதிர்ச்சியிலேயே அவர் உயிரிழந்தார்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் எஸ்.ஐ. அறிவுடைநம்பி மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார். பணி முடிந்து பைக்கில் சென்றபோது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.