ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு இடங்களில் தாமதமாகத் தொடங்கி உள்ளன.

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்காக, 27 மாவட்டங்களில் உள்ள 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தற்போது தேர்தல் நடைபெற்றது.

இந்த 156 ஊராட்சி ஒன்றியங்களிலும் மொத்தம் 1.30 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.இவற்றில், 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளும், 2546 ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளும், 4700 ஊராட்சி தலைவர் பதவிகளும், 37,830 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் சேர்த்து, இந்த தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கான நடைமுறைகள் காலை 8 மணிக்குத் தொடங்கிய நிலையில், பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

காலை உணவு வழங்கப்படாததால், வாக்கு எண்ணும் ஊழியர்கள் கடும் அவதியடைந்தனர். இதன் காரணமாக மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், விருதுநகர் மாவட்டம் சாத்தூர், திருப்பூர் மாவட்டம் அவிநாசி, அரியலூர் ஜெயங்கொண்டம், வேதாரண்யம், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஆகிய ஒன்றியத்தில் வாக்கு எண்ணும் பணியில் தாமதம் ஏற்பட்டது.

குறிப்பாக, தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் காலை 11 மணி அளவில் தான் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதாகக் கூறப்படுகிறது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சாவி தொலைந்ததால் வாக்கு எண்ணிக்கை தாமதம் ஆனதாகவும், இதனால் சுத்தியலால் தபால் ஓட்டுப்பெட்டி உடைக்கப்பட்ட பிறகு, வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டதாகவும் தெரிகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஊராட்சி ஒன்றிய வாக்குகள் எண்ணும் பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அதிகாரிகள் எந்தெந்த அறைகளுக்குச் செல்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால், வாக்கு எண்ணிக்கை தாமதம் எனக் கூறப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, திருவள்ளூரில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இங்கு, ஒன்றியத்தில் வாக்குச்சீட்டுகளைப் பிரித்தெடுக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. புதுக்கோட்டையில் வாக்கு எண்ணும் மைய அதிகாரிகள் பணி ஒதுக்கீட்டில் குழப்பம் ஏற்பட்டதால், அங்கும் வாக்கு எண்ணும் பணி தாமதமானது.

அதேபோல் பழனி, திருத்துறைப்பூண்டி, நாகை மாவட்டம் கீழையூர் ஆகிய பகுதிகளிலும் வாக்கு எண்ணும் பணி தாமதமாக தொடங்கி உள்ளன.

இதனிடையே, வாக்குச்சாவடி மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன. மேலும், வாக்கு எண்ணும் பணி தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.