அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை நடத்த தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. துணைவேந்தர் சூரப்பா மீது பல்வேறு புகார்கள் வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது.

ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த விசாரணை குழு, 3 மாதங்களில் அறிக்கை அளிக்க குழுவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா இந்த தகவலை தெரிவித்தார். அரியர் விவகாரம், சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட விவகாரங்களில் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக சூரப்பா மீது முன்னர் புகார் தெரிவிக்கப்பட்டது. குழு தரும் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டால் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் என்று சூரப்பா தெரிவித்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டால் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் என்று சூரப்பா தெரிவித்துள்ளார். சென்னையில் அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பா இன்று பத்திரிகையாளர்கள் மத்தியில் பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

``என் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் உண்மை அல்ல. விசாரணை கமிஷன் அமைத்தது அதிர்ச்சியளிக்கிறது. நான் ஒரு பைசா கூட லஞ்சம் பெற்றதில்லை.

என் மீது புகார் மனு அளித்தவர்கள் யார் என்பது எனக்குத் தெரியாது. நான் அப்பழுக்கற்றவன். இதற்கு முன்னதாகப் பல்வேறு முன்னணிக் கல்வி நிறுவனங்களில் பணியாற்றியுள்ளேன்.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி. உள்ளிட்ட பெரிய நிறுவனங்களில் பணியாற்றியுள்ளேன். பெரிய கல்வி நிறுவனங்களில் கல்வி ஆலோசகராகவும் இருந்துள்ளேன். என் மீது இதுவரை எந்தக் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டதில்லை.

எனவே, இந்த பொய்யான குற்றச்சாட்டுகள் குறித்து எனக்குக் கவலை இல்லை. என் மீது விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிட்டி குறித்தும் எனக்குக் கவலை இல்லை.

பல்கலைக்கழகத்தில் சில பணி நியமனங்கள் துணைவேந்தரின் அதிகாரத்திற்கு உட்பட்டே செய்யப்பட்டுள்ளன. பல்கலைக்கழகத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டுதான் என் மகளை நான் பணி நியமனம் செய்தேன். அதில் எந்தவித விதிமீறலையும் நான் செய்யவில்லை.

இது சம்பந்தமாக நான் யாரையும் சந்திக்கப் போவதில்லை. இது தொடர்பாக நான் தமிழக ஆளுநரைச் சந்திக்கவில்லை. விசாரணை கமிட்டி அழைத்தால் எனது விளக்கத்தை அளிக்கத் தயாராக உள்ளேன். என் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன்"

இவ்வாறு அவர் கூறினார்.