15 செல்போன்களை பயன்படுத்தி, வங்கி பெண் வாடிக்கையாளர்களுடன் தவறான உறவு வைத்திருந்த கேசியரை, அவரது மனைவியே போலீசாரிடம் மாட்டிவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள இந்தியன் வங்கியில் கேஷியராக பணியாற்றி வந்த எட்வின் ஜெயகுமார், சில மாதங்களாகத் தனது மனைவியுடன் சரியாகப் பேசாமல், இல்வாழ்க்கையில் நாட்டம் இல்லாதவர் போல் இருந்துள்ளார்.

இந்நிலையில், தஞ்சை மாவட்டம் வல்லத்தில் உள்ள தனது வீட்டில் உள்ள தனி அறையில் அமர்ந்து, 15 செல்போன்களை பயன்படுத்தி, வாட்ஸ்ஆப்பில் மாறி மாறி பல பெண்களிடம் ஆபாசமாகப் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

இதனால், சந்தேகமடைந்த அவரின் மனைவி, அந்த செல்போன்களை ஆராய்ந்து பார்த்துள்ளார். அப்போது, அதில் பல பெண்களுடைய ஆபாச போட்டோ, வீடியோ, உரையாடல்கள் என்று பல விசயங்கள் இருப்பது தெரியவந்தது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து கணவரிடம் விளக்கம் கேட்டுள்ளார். இது பற்றி வெளியே பேச கூடாது என்று மனைவியைக் கடுமையாக மிரட்டியதோடு, கணவரின் அம்மாவும் அவருடன் சேர்ந்துகொண்டு, அந்த பெண்ணை மிரட்டியதாகத் தெரிகிறது.

இதனால், பயந்துபோன எட்வின் ஜெயகுமாரின் மனைவி, தனது தந்தையின் உதவியுடன், தஞ்சை டி.ஐ.ஜி.யிடம், ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், “வங்கிக்கு வரும் பெண் வாடிக்கையாளர்களிடம் செல்போன் எண்களை வாங்கி வைத்துக்கொண்டு, அவர்களை வாட்ஸ்ஆப் மூலம், தனது கள்ளக் காதல் வலையில் வீழ்த்தி, அதன் பிறகு, அவர்களுடன் தவறான உறவில் ஈடுபட்டு” வந்தது தெரியவந்தது.

அதனையடுத்து, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் ஜெயக்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், தலைமறைவான ஜெயக்குமார் உள்ளிட்ட அவரது பெற்றோர்களையும் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.