அழகாக இல்லையெனக் காதலியைக் கழற்றிவிட்ட காதலனை அழைத்து போலீசார் திருமணம் செய்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பொழிச்சலூர் அகத்தீஸ்வரர் நகரைச் சேர்ந்த வெங்கடேஷ், அனகாபுத்தூர் லேபர் பள்ளி தெருவைச் சேர்ந்த கவிதா ஆகிய இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

Chennai Guy who tried to cheat girl and run caught

இதனிடையே, அவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனால், வெறுத்துப்போன காதலன், காதலியைக் கழற்றிவிட நினைத்து, அவர் வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.

அப்படி, காதலன் வெளிநாடு செல்ல நினைக்கும்போதெல்லாம், காதலி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இப்படியாகக் காதலன் 3 முறை வெளிநாடு செல்ல முயன்றபோது, காதலி 3 முறையும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இந்நிலையில், காதலி அழகாக இல்லை என்று கூறி, காதலியை கழற்றிவிட நினைத்து, அவருடன் காதலன் சண்டை போட்டுள்ளார். மேலும், அவர் வெளிநாடு செல்லவும் திட்டமிட்டார். 

இனி காதலனை விட்டால், மீண்டும் கரம் பற்ற முடியாது என்று நினைத்த காதலி, அங்குள்ள காவல் நிலையத்தில், காதலன் மீது புகார் அளித்துள்ளார்.

புகாரில், “என்னை காதலித்து மனைவியிடம் இருப்பதுபோல் என்னிடம் இருந்துவிட்டு, இப்போது என்னை ஏமாற்றிவிட்டு, காதலன் வெளிநாடு செல்ல உள்ளதாக”  சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து, காதலன் வெங்கடேஷை பிடித்து வந்து போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, அவர்கள் இருவரும் 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததும், காதலி அழகாக இல்லை என்பதால், அவரை விட்டுப் பிரிந்து வெளிநாடு செல்ல நினைத்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

Chennai Guy who tried to cheat girl and run caught

இதனையடுத்து, இவர்களை இப்படியே விட்டால், காதலி கவிதா ஏமார்ந்து போவாள் என்று எண்ணிய போலீசார், இருவீட்டார் பெற்றோரிடமும் பேசி திருமணத்திற்குச் சம்மதம் வாங்கினர். பின்னர், காவல் நிலையத்தில் வைத்தே, போலீசார் அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தனர்.

அதன்படி, காதல் ஜோடிகள் ஒருவருக்கு ஒருவர் மாலை மாற்றிக்கொண்டனர். அதன்பிறகு, காதலன் தாலி கட்டினார். பின்னர், புதுமண ஜோடிகளுக்கு போலீசார் வாழ்த்துக்களைக் கூறியதோடு, இரு தரப்பிடமும் எழுதி வாங்கிக்கொண்டு போலீசார் அனுப்பி வைத்தனர். இதனால், அங்குப் பரபரப்பு ஏற்பட்டது