ஒரே நாளில் ஒரே காவல் நிலையத்தில், 3 காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“காதல், இந்த உலகத்தில் அவ்வளவு சக்தி மிக்க ஒரு வார்த்தை. 

மண்ணாக இருப்பவனை மனிதனாகவும்..
கல்லாக இருப்பவனைக் கவிஞனாகவும்..
மாற்றும் மகத்துவம் காதலுக்கு மட்டுமே உண்டு! 

காதல், அது ஒரு புன்னகை! மந்திரம்!! மேஜிக்!!!
அப்படிப்பட்ட ஒரு மேஜிக் ஒரே ஊரில் ஒரே நாளில் 3 ஜோடிகளுக்கு நிகழ்ந்துள்ளது தான் ஆச்சயரிம்.

ஆம், ஈரோடு மாவட்டம் ஊராட்சிக்கோட்டையைச் சேர்ந்த அர்ச்சுனன், நகலூரைச் சேர்ந்த அமராவதி ஆகிய இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

3 newly wedded Erode couples seek police protection

இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, திருப்பூர் விநாயகர் கோயிலில் 

திருமணம் செய்து கொண்டனர். பின்னர், தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்குப் பயந்த அந்த காதல் ஜோடி, பவானி மகளிர் காவல்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். 

இவர்களைப் போலவே, சேலம் மாவட்டம் கண்ணாமூச்சியைச் சேர்ந்த பூபாளன் - சிந்து பிரியா ஜோடிகளும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். 

இருவரும் தங்கள் காதல் விவகாரம் பற்றி தங்களது வீட்டில் கூறியுள்ளனர். தகவல் சொன்னது தான் தாமதம், இரு வீட்டாரின் பெற்றோர்களும் பொங்கி எழுந்துள்ளார். 

3 newly wedded Erode couples seek police protection

இதனையடுத்து, இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்து, அந்த பகுதியில் உள்ள கோயிலில் திருமணம் செய்துகொண்டு, பவானி மகளிர் காவல்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். 

அதேபோல், ஈரோடு சேனாதிபாளையத்தைச் சேர்ந்த மகேஷ் - கார்த்திகா ஜோடியும், கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். வழக்கம் போல், இவர்கள் வீட்டிலும் காதலுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். 

இதனால், பிரிய மனம் இல்லாத இவர்கள் இருவரும், வீட்டை விட்டு வெளியே வந்து கோயிலில் திருமணம் செய்துகொண்டு, பவானி மகளிர் காவல்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். 

3 newly wedded Erode couples seek police protection

ஒரே நாளில் அடுத்தடுத்து 3 காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்ததால், போலீசார் செய்வதறியாது திகைத்தனர். இதனையடுத்து, காவல் நிலையத்தில் அதிக அளவிலான போலீசார் குவிக்கப்பட்டனர்.

அத்துடன், காதல் திருமணம் செய்துகொண்ட 6 பேரின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் காவல் நிலையம் முன்பு திரண்டதால், அந்த இடமே பரபரப்பாக காணப்பட்டது. 

இதனையடுத்து, ஒவ்வொரு ஜோடிகளின் பெற்றோர்களை அழைத்து போலீசார் சமரசம் பேசி அவர்களுடன் காதல் ஜோடிகளை அனுப்பி வைத்தனர். முரண்டு பிடித்த சிலரை போலீசார் எச்சரித்தும் அனுப்பினர். இதனால், பவானி காவல் நிலையம் பகுதியில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.