தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், மதுபானங்களின் விலையை 20 ரூபாய் வரை தமிழக அரசு உயர்த்தி உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, 40 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது 3 வது முறையாக மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனினும், நேற்று முன்தினம் முதல் பல்வேறு இடங்களில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. அதன்படி, கடைகள் திறந்திருக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், நாளை முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபானத்தின் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வை வரியினை, தமிழக அரசு 15 சதவீதம் உயர்த்தியுள்ளது. மேலும், டெல்லி, கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் மதுபான விலை உயர்வு அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் மதுபானங்களின் விலையை உயர்த்தி தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதன் மூலம், மதுபானங்களின் விலை உயர்வு டாஸ்மாக் கடைகளில் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

இந்த விலை உயர்வு, இந்தியத் தயாரிப்பு மற்றும் வெளிநாட்டு மதுபானங்கள் மீதும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், சாதாரண வகை 180 மில்லி மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை 10 ரூபாய் வரை உயர்கிறது.

அதேபோல், நடுத்தர மற்றும் பிரீமியம் வகை மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை 20 ரூபாய் உயர்கிறது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசுக்கு கடந்த 2019 - 2020 ஆம் நிதியாண்டில், டாஸ்மாக் வழியாக 31 ஆயிரத்து 157 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் கிடைத்தது.

இதனிடையே, கர்நாடகாவில் ஊரடங்கு தளர்வின் 2 வது நாளான நேற்று 197 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையானது. நேற்று முன் தினம் ஒரு நாளில் மட்டும் 45 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானதானது குறிப்பிடத்தக்கது.