சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் ஏன் ஏற்படுகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக, முதலமைச்சர் பழனிசாமி தமிழக மக்களுக்கு சன்று முன் உரையாற்றினார்.

reason for increase in corono patients in Chennai - TN CM

அப்போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “மத்திய அரசின் வழிகாட்டுதல் படி, கொரோனா நோய் பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக” குறிப்பிட்டார். 
 
“கொரோனாவை தடுக்க தமிழகம் முழுவதும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், “கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் 4 முறை ஆலோசனை நடத்தியுள்ளதாகவும்” குறிப்பிட்டார்.

மேலும், “கொரோனா தடுப்பு பணிக்காக 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், 3 அதிகாரிகளுக்கும் உதவ 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். 

“சென்னையில் மண்டல வாரியாக கொரோனா தடுப்பு பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும், கட்டுப்பாட்டு அறைக்கு சென்னை மாநகர மக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும்” குறிப்பிட்டார். 
 reason for increase in corono patients in Chennai - TN CM


குறிப்பாக, “தடை செய்யப்பட்ட பகுதிகளில் தினமும் 3 முறை கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது என்றும், நடமாடும் பரிசோதனை வாகனம் சென்னையில் மக்கள் இருக்கும் இடங்களுக்கே நேரிடையாக செல்கிறது” என்றும் முதலமைச்சர் கூறினார். 

“அரசு சரியான முறையில் நடவடிக்கை எடுத்து வருவதால் குணம் அடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும், சென்னையில் 4 ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்ட முதலமைச்சர் பழனிசாமி, தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும்” சுட்டிக்காட்டினார். 

மேலும், “சென்னையில் கொரோனா வேகமாகப் பரவ காரணம் குறுகிய தெருக்கள், மக்கள் தொகை அதிகம் உள்ளிட்ட காரணங்களால் தான் பரவுகிறது” என்றும் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.

“50 பரிசோதனை மையங்கள் மூலம் நாள்தோறும் 12 ஆயிரம் பேருக்குப் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாகவும்” முதலமைச்சர் மேற்கொள் காட்டினார்.

அதேபோல், “வெளி மாநில தொழிலாளர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகள் நடப்பதாகத் தெரிவித்த முதலமைச்சர், தமிழகத்தில் சுமார் 50 ஆயிரம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளதாகவும், அவர்கள் படிப்படியாக அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

“வீட்டை விட்டு வெளியில் சென்றால் மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தினார். 
 
முக்கியமாக, “அரசின் வழிமுறைகளைப் பின்பற்றினால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்றும், பொதுமக்களுக்கு ஜூன் மாதமும் ரேஷன் கடைகள் மூலம் விலையில்லா பொருட்கள் வழங்கப்படும்” என்றும், முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.