நாடு முழுவதும் நேற்று காலை முதல் இன்று அதிகாலை 5 மணி வரை நடைபெற்று வந்த மக்கள் ஊரடங்கு, வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், நேற்று காலை முதல் இரவு 9 மணி வரை, பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தார்.

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, முதல் நாள் பிற்பகல் முதலே பல இடங்களில் கடைகள் மூடப்பட்டன. பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கத் தொடங்கினர். இதனால், சனிக் கிழமை பிற்பகல் முதலே தமிழகத்தின் பல இடங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

குறிப்பாக, பொதுமக்கள் பலரும், சனிக் கிழமை காலையே, அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமைக்குத் தேவையான பால், உணவு உள்ளிட்ட அடிப்படியான பொருட்களை வாங்கி வைத்துக்கொண்டனர்.

இதனால், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் தவிர்த்து, தமிழகத்தின் ஒட்டுமொத்த கிராமப் புறங்களில் சனிக்கிழமை மாலை முதலே ஊரே உறங்கிப் போனது.

இதனையடுத்து ஞாயிற்றுக் கிழமை காலையில், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் ஒட்டு மொத்த ஊர்களும், ஊரடங்கில் அடங்கிப்போனது. பொதுமக்கள் நலன் கருதி பிரதமர் மோடி அறிவித்த மக்கள் ஊரடங்கை, பெரும்பாலான பொதுமக்கள் நேற்று கடைப்பிடித்தனர்.

இதனால் டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட இந்திய பெருநகரங்கள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன. இந்திய வரலாற்றில் இப்படியொரு நிலைமையை, இந்தியா இதுவரை கண்டதில்லை. நேற்று தான் இந்தியாவே ஊரடங்கில் முடங்கிப்போனது.

இதனிடையே, இந்த ஊரடங்கு நேற்று வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், அதை இன்று அதிகாலை 5 மணி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனாலும், அத்தியாவசியப் பணிகள் தொடர்ந்து நடைபெற எந்தத் தடையும் இல்லை எனவும் தமிழக அரசு கூறியது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் ஒத்துழைப்பு தந்து, இன்று காலை 5 மணி வரை ஊரடங்கை கடைப்பிடித்தனர். இதனால், நாடு முழுவதும் நேற்றும், தமிழகத்தில் இன்று காலை வரை கடைப்பிடித்து வந்த ஊரடங்கு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.