நான் முஸ்லீம், என் மனைவி இந்து, என் குழந்தைகள் இந்தியர்கள் என்று நடிகர் ஷாருக்கான் நெகிழ்ச்சி பொங்க பேசியுள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, கடந்த பல ஆண்டுகளாகப் பேசாமல் இருந்த இந்து - முஸ்ஸீம் பிரச்சனை, இதன் மூலம் மீண்டும் பேசும் பொருளாக மாறிவிட்டது.

இந்நிலையில், மும்பையில் தனியார் தொலைக்காட்சி நடத்தும் 'டான்ஸ் ப்ளஸ் 5' என்னும் நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக ஷாருக்கான் கலந்துகொண்டார்.

பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அவர், சமூகம் தொடர்பாகப் பேசினார். அப்போது, “ எனது வீட்டில் எப்போதுமே இந்து - முஸ்லிம் பிரச்சினை பற்றிப் பேசியதே இல்லை. அது பற்றி சிந்தனையே எங்களுக்கு வந்தது கிடையாது.

காரணம், எனது மனைவி இந்து, நான் முஸ்லிம், எனது குழந்தைகள் இந்தியர்கள். எனது மகள், ஒருமுறை பள்ளி படிவங்களில் மதம் குறித்து கேட்டபோது, 'நாம் எந்த மதத்தை சேர்ந்தவர்களும் இல்லை, நாம் அனைவரும் இந்தியர்கள்' என இயல்பாக அந்தப் படிவத்தில் எழுதினார். அந்த அளவுக்கு நாங்கள் இந்தியர்களாக இருக்கிறோம், வாழ்கிறோம்” என்று ஷாரூக்கான் பேசினார்.

தற்போது, நடிகர் ஷாரூக்கான் பேசியது சமூக வலைத்தளங்களில் வைராகி வருகிறது.