2021 சட்டமன்ற தேர்தலுக்கு புது வியூகம் அமைத்துள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை வேலப்பன்சாவடியில், நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

பொதுகுழுவில் கலந்துகொள்ளும் முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு 4 சதவிகிதம் என்ற அளவிலிருந்தது.

ஆனால், தற்போது நடந்து முடிந்துள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 10 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. இந்த தேர்தலில் திமுக அதிக இடங்களை கைப் பற்றினாலும், பெரும்பாலான இடங்களில் நாம் தமிழர் கட்சிக்கும் பெருவாரியான வாக்குகளை மக்கள் அளித்துள்ளனர்.

குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஊரில் 2 வது இடம் பிடித்துள்ளது. பல ஊர்களில், நாம் தமிழர் கட்சி 3 வது இடம் பிடித்துள்ளது. இதனால், இந்த தேர்தலில் எங்களுக்குப் பின்னடைவு இல்லை.

அதேபோல், 2021 சட்டமன்ற தேர்தலுக்கு புது வியூகம் அமைத்துள்ளோம். சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆண் - பெண் வேட்பாளர்கள் சரிசமமாகக் களமிறக்கப்படுவார்கள். 234 தொகுதிகளில் தலா 117 ஆண் - பெண் வேட்பாளர்களுக்கு நம் தமிழர் போட்டியிட வாய்ப்பு வழங்கும்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும், நாம் தமிழர் வேட்பாளர்கள் யார் யார் என்ற விபரங்கள், இந்த மாதம் அறிவிக்கப்படுவார்கள். இதனால், 2021 சட்டசபைத் தேர்தலை வலிமையாக நாங்கள் எதிர்கொள்வோம்” என்று தெரிவித்தார்.

மேலும், நெல்லை கண்ணன் கைது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்துப் பேசிய சீமான், “நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. யாரையோ திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த கைது நடவடிக்கையைத் தமிழக அரசு எடுத்துள்ளது” என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.