கடந்த 2017 -ம் ஆண்டு, தொடங்கப்பட்ட யூ-ட்யூப் சேனல், கருப்பர் கூட்டம். முற்போக்கு வீடியோக்களை அடிப்படையாக வைத்து இயங்கி வந்த இந்த சேனலில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆபாச புராணம் என்றொரு தொடரை வெளியிடத் தொடங்கினர். அதில், சமஸ்கிருத மந்திரங்களின் தூய தமிழாக்கமானது வழங்கப்பட்டு வந்தது. இந்தத் தொடர் வெளியாகத் தொடங்கிய நாளிலிருந்தே, வலதுசாரிகளின் எதிர்ப்பை தொடர்ச்சியாகப் பெற்று வந்தது. இருப்பினும், எந்த சமரசமும் இல்லாமல் இயங்கினர் கருப்பர் கூட்டக் குழுவினர்.

மேலும், ஆபாச புராணம் தொடரின் ஒருபகுதியாக `கந்த சஷ்டி கவசம்' குறித்து சமீபத்தில் பேசினர் கருப்பர் கூட்டக் குழுவினர். கந்த சஷ்டி கவசம் விவகாரத்துக்குப் பிறகு, ஆன்மிக நம்பிக்கை கொண்டிருக்கும், குறிப்பாகத் தமிழ்த் தேசியவாதிகளிடமும் விமர்சனங்களைப் பெறத் தொடங்கியது. அந்தவகையில் தமிழ்க்கடவுளை ஆபாசமாக பேசியதற்காக கருப்பர் கூட்டம் யூட்யூப் சேனல் வீடியோ வெளியிட்டதற்கு திரைத்துறை பிரபலங்கள் சிலரும்கூட கண்டனம் தெரிவித்தனர். இந்து அமைப்புகள் இந்த சேனல் மீது வழக்கத் தொடர்ந்தது. பாஜக உள்ளிட்ட கட்சிகள், இந்த சேனலை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.

கந்த சஷ்டி கவசம் பற்றி சர்ச்சையாகப் பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அதிகாரப்பூர்வமாகச் சென்னை கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய குற்றப்பிரிவு போலீசார் கருப்பர் கூட்டம் யூ-டியூப் சேனல் மற்றும் அதன் வெளியீட்டாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய வேளச்சேரி பகுதியை சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட நிகழ்ச்சி தொகுப்பாளரான சுரேந்திரன் நடராஜன் வியாழக்கிழமை
புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சுரேந்திர நடராஜன் அளித்த தகவலின்படி சென்னை தியாகராய நகர், கண்ணம்மாப்பேட்டை, நியூ போக் சாலையில் உள்ள கருப்பர் கூட்டம் அலுவலகத்துக்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி சரவணகுமார், ஏ.சி வேல்முருகன் தலைமையில் போலீசார், மற்றும் புகார் கொடுத்த இந்து மக்கள் கட்சி தமிழகம் அமைப்பைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ள சுரேந்திரன் ஆகியோருடன் சென்று, கறுப்பர் கூட்டம் அலுவலகத்திலிருந்த ஆவணங்களைக் கைப்பற்றி, அலுவலகத்தைப் பூட்டி சீல் வைத்துள்ளனர். அலுவலகத்தை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விட்ட நபரிடமும் குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

- பெ. மதலை ஆரோன்