அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு நாளை முதல் ஆயிரம் ரூபாயுடன் சர்க்கரை கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.

கொரோனா தாக்கம் காரணமாக, தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அனைவரும் வாழ்வாதாரத்தை இழந்து, வீடுகளில் முடங்கி உள்ளனர்.

இதனால், தமிழக மக்களுக்கு மாநில அரசு பல்வேறு சலுகைகள் மற்றும் நலத்திட்டங்களை அறிவித்தது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி ரேஷன் அட்டைகளுக்கும் ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்காக, ஆயிரத்து 882 கோடியே 90 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

இதன் மூலம், தமிழகத்தில் ஒரு கோடியே 88 லட்சத்து 29 ஆயிரத்து 73 பேர் பயன் அடைவார்கள் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. அந்த பணம் நாளை முதல் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது. அத்துடன், ஏப்ரல் மாதத்திற்கான சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, எண்ணெய் ஆகியவையும் இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில், நாளை வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் இன்று வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கொரோனா அச்சத்தால், சமூக விலகலை பொதுமக்கள் கடைப்பிடிக்கும் வகையில், நாள் ஒன்றுக்கு 100 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இப்படியாக, நாள் ஒன்றுக்கு 100 பேர் வீதம், இந்த பணம் மற்றும் ரேஷன் பொருட்கள் இந்த மாதம் முழுவதும் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டோக்கன் வழங்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் யாரும் சமூக விலகலைக் கடைப்பிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.