பஞ்சாபில் ஊரடங்கை மீறி ஊர் சுற்றியதைத் தட்டிக் கேட்ட போலீசின் கையை, 9 பேர் கொண்ட கும்பல் வெட்டி அட்டூழியத்தில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரசால், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, பஞ்சாப் மாநிலத்திலும் ஊரடங்கு உத்தரவு கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், அந்த மாநிலத்தில் சிலர் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல், வெளியே ஊர் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதனால், அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் போலீசார் முழுவீச்சில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா அருகே ஊரடங்கு உத்தரவை மீறி சீக்கியர்கள் சிலர் காரில் சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் அனைவரையும் தடுத்து நிறுத்திய போலீசார், சமூக இடைவெளியை அறிவுறுத்தி கூட்டமாகச் செல்லக்கூடாது என்று கூறி உள்ளனர். அத்துடன், அவர்களைத் தனித் தனியாக செல்லுமாறும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

இதனை ஏற்க மறுத்த அந்த கும்பல், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், கடும் ஆத்திரமடைந்த அந்த 9 பேர் கொண்ட கும்பல், போலீசாரை கடுமையாகத் தாக்கி, திடீர் வன்முறையில் ஈடுபட்டது.

பதிலுக்கு அந்த போலீசாரும் அவர்களைத் தாக்கத் தொடங்கி உள்ளார். இதனால், கடும் ஆத்திரமடைந்த அந்த ரவுடி கும்பல், போலீசாரின் கையை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக வெட்டி உள்ளது. இதில், அந்த போலீசாரின் கை சம்பவ இடத்திலேயே துண்டானது. பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

இது குறித்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கும்பலை சுற்றி வளைத்து 9 பேரையும் கைது செய்தனர். மேலும்,அவர்களிடமிருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனிடையே, ஊர் சுற்றியதைத் தட்டிக் கேட்ட போலீசின் கை, ரவுடி கும்பலால் வெட்டப்பட்ட சம்பவம், பஞ்சாபில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.