தமிழகத்தை மிரட்டும் கொரோனா வைரசுக்கு இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 9 அக அதிகரித்துள்ளது. 

தமிழக மக்களை கொரோனா என்னும் கொடிய வைரஸ் தொடர்ந்து மிரட்டத் தொடங்கியிருக்கிறது. இதனால், தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. 

coronavirus tamil nadu update 911 test positive

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் அலுவலகத்தில், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தினமும் பேட்டியளிக்கும் அலுவலக வளாகத்திலேயே ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில், 27 வயது பெண் மருத்துவர் ஒருவருக்கு கொரோனோ உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, பெண் மருத்துவர் பணியாற்றிய மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. அத்துடன், மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல், சென்னையில் 44 வயது ஆண் மருத்துவர் ஒருவருக்கு கொரோனோ உறுதி செய்யப்பட்டது. இதனால், அந்த மருத்துவமனையில் பணியாற்றும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

coronavirus tamil nadu update 911 test positive

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் ஏற்கனவே ஒரு மருத்துவருக்குப் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை அண்ணாநகரில் ஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

குறிப்பாக, தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,117 பேருக்கு ரத்த மாதிரிகள் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. நேற்று ஒரே நாளில் கோவை மாவட்டத்தில் மட்டும் 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அரியலூரில் கொரோனா வார்டில் காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டிருந்த நபர், மன உளைச்சல் காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில் தனது மனைவி கொண்டு வந்த பிரியாணியை சாப்பிட அனுமதிக்காததால், அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவமனையின் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

ஒட்டுமொத்தமா தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 9 அக அதிகரித்துள்ளது.  

மேலும், தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பதால், ஊரடங்கை மேலும் 14 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே, தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 1,51,151 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், 1,19,286 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 53,72,044 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.