உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. 

சவூதி அரேபியாவில் அரச குடும்பத்தைச் சேர்ந்த 150 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, சவுதி அரச குடும்பத்தில் கொரோனா பாதிப்பால் அரசர் மற்றும் பட்டத்து இளவரசர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, அரசர், பட்டத்து இளவரசர் உட்பட 150 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

Corona death count crosses 95 thousand worldwide

இங்கிலாந்தில் கொரோனாவுக்கு மேலும் ஒரு இந்திய மருத்துவர் உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் இருக்கும் மேலும் 5 மருத்துவர்களுக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா நோய் தொற்றால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் ஊரடங்கு காலத்தை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து அந்நாட்டு அதிபர் ரமபோஸா உத்தரவு பிறப்பித்துள்ளார். மார்ச் 27 ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தென் ஆப்பிரிக்கா அரசு விளக்கம் அளித்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவிற்கு சுமார் 1,783 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால், அமெரிக்காவில் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,691 ஆக அதிகரித்துள்ளது. இன்றுக்குள் அந்த பலி எண்ணிக்கை 17 ஆயிரத்தை நெருங்கும் என்றும் அஞ்சப்படுகிறது. இதுவரை அமெரிக்காவில் நாலரை லட்சம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், இதன் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

Corona death count crosses 95 thousand worldwide

ஸ்பெயினில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 222 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஒட்டுமொத்தமாக உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்தைத் தாண்டி உள்ள நிலையில், உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16 லட்சத்தைக் கடந்த, 17 லட்சத்தை நெருங்கி வருகிறது. இதனால், உலக மக்கள் அனைவரும் உயிர் பயத்தில் உரைந்துபோய் உள்ளனர்.

மலேசியாவில் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் முகைதீன் யாசின் கூறியுள்ளார். ஏற்கனவே, மலேசியாவில் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஏப்ரல் 28 ஆம் தேதி வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. 

சீனாவில் கொரோனாவின் இரண்டாம் அலை வீசும் ஆபத்து உள்ளதாக சீன அதிபர் தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால், சீன மக்கள் மீண்டும் பீதியடைந்துள்ளனர். 

இதனிடையே, கொரொனாவுக்கு உலகம் முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால், அனைவரும் வாழ்வாதாரத்தை இழந்து வீடுகளில் முடங்கி உள்ளனர். இதனால், சுமார் 50 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் தள்ளப்படுவார்கள் என்று ஐ.நா சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.